Jun 21, 2018

இசைவோம்.. இசையாவோம்.. இளையராஜாவினால்..! – 5

courtesy- google god
                     
ஒரு ஆரோக்கியமான மனிதன் நலமாக வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் உணவு, உறைவிடம், உடை ஆகியன. இல்லற உறவு என்பது குறிப்பிட்ட பருவத்தில் இந்த வரிசையில் இணையும். இல்லறம் என்ற நல்லறம் வேண்டாமென்பவர்கள், இந்த வரிசையை வேறுவிதமாகத் தங்களுக்குப் பிடித்தமான வகையில் கையாள்வார்கள். குழந்தையாக இருக்கும்போது கற்ற கல்வியும், வளரும்போது சுற்றுப்புறத்தில் நாம் பெறும் அனுபவங்களும், அதன்பின் ஏதாவது ஒரு பணியைச் சிறப்பாகச் செய்யும்போது கிடைக்கும் வெகுமதிகளும் இந்த அடிப்படைத் தேவைகளை நமக்கும் நாம் சார்ந்தோருக்கும் நிரந்தரமாகக் கிடைக்கச்செய்யும் வழிகளைக் காட்டுகிறது. அதை நோக்கிய பயணத்துக்கு உந்துகிறது. இந்த காலகட்டத்தில் நாம் செய்யும் பணியானது நமது அடிப்படைத் தேவைகளையே மறக்கடிக்கச் செய்தால் என்னவாகும்? என் கடன் பணி செய்து கிடப்பதே என்று மாணிக்கவாசகராய் மாறியிருக்கும் workhaholicகுகளின் நிலை இதுதான். இதனால் பயன்பெறுபவர்கள் தவிர, சம்பந்தப்பட்ட வொர்க்கworkhaholicகுகளை சார்ந்தோருக்கு அது வேதனை தான். கலைஞர்களைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சினை இன்னும் ஒரு படி அதிகம். 

இசையின் ராஜாவான இளையராஜா, தன் குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் அத்தகைய வேதனையைத் தந்திருப்பார் என்பதில் ஐயம் இல்லை. ஏனென்றால், நிதானமாக உட்கொள்ள வேண்டிய உணவையே பல பாடல்களின் உருவாக்கத்துக்கு நடுவே, அவர் உண்ட காலமொன்று உண்டு. இசைக்குள் அவர் மூழ்கிக்கிடந்த அந்த காலம், அவரைத் தேடிவந்த தயாரிப்பாளர்களுக்குப் பொற்காலம். அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை, அது பருவ வரையறைக்குள் அடங்காத, என்றென்றைக்குமான வசந்தகாலம். 

தன்னைத் தேடிவந்த இயக்குனர்களுக்கு, அப்போது ரசிகராக இருந்தார் ராஜா. அவர்களில் சிலர், ராஜாவின் இசைக்கு அடிமைகளாக இருந்தனர். இந்த இயக்குனர்களின் படங்களில், இளையராஜாவின் இசை பெரும்பாலும் காட்சிக்குப் பொருந்திப் போகும். அதற்காக, அவர்கள் கடுமையாக மெனக்கெடுவார்கள் என்பது மற்றுமொரு கதை. தமிழ் திரைப்பட இயக்குனர்கள் தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் அப்படிச் சில இயக்குனர்களின் குட்புக்கில் இடம்பிடித்திருந்தார் இளையராஜா. 

courtesy- google god
80களில் தெலுங்கு திரையுலகில் புதிய தடம் பதித்த வம்சி அப்படியொரு ராஜா ரசிகர். கார்த்திக், பானுப்ரியா நடித்த ’பாடும் பறவைகள்’ திரைப்படம் இவர் இயக்கியது தான். இதில் இடம்பெற்ற ஏகாந்த வேளை மற்றும் கீரவாணி பாடல்கள் எல்லோருக்கும் எப்போதும் பிடித்த பாடல் வரிசையில் இடம்பெறுபவை. 

ராம்கோபால் வர்மாவின் வருகைக்கு முன்பே, தெலுங்கு திரையுலக வணிக வழக்கங்களை மீறிய திரைக்கதைகளைப் படைத்தவர் இவர். ஓருவகையில் வர்மாவுக்கு முன்னோடி எனவும் சொல்லலாம்.
90கள் வரை வம்சி – இளையராஜா கூட்டணி தெலுங்கில் பல ஹிட் பாடல்களைத் தந்துள்ளது. அவற்றுள் ஒன்று சலங்கையில் ஒரு சங்கீதம். மோகன், பானுப்ரியா நடித்த இந்த திரைப்படமும் தெலுங்கில் ‘ஆலாபனா’ என்ற பெயரில் தயாரானது தான். இதன் தமிழ் பதிப்பு வெளியானதா என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆனால், பாடல்கள் பல இணையதளங்களில் கிடைக்கின்றன. 

சலங்கை ஒலி, சங்கராபரணம், காதல் ஓவியம் பாணியில் கர்நாடக இசையையும் சதிர் ஆட்டத்தையும் அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது. ஆங்காங்கே த்ரில்லர் படத்துக்கான திருப்பங்களையும், அற்புதமான காதல் காட்சிகளையும், சற்றே காரம் தூக்கலான தெலுங்கு மசாலா காட்சிகளும் நிரம்பிய படமாக இந்த திரைப்படம் இருக்குமென்று அனுமானிக்கிறேன். யூடியூபில் இதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே காணக்கிடைக்கிறது. ஆனால், இதிலுள்ள பாடல்கள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. 
 
courtesy - google god
குறிப்பாக, பள்ளி ஆண்டுவிழாக்களில் வைதேகி காத்திருந்தாள், மைதிலி என்னைக் காதலி, சங்கராபரணம், சலங்கை ஒலி பாடல்களுக்கு மட்டுமே பிரதான இடம் கொடுக்கப்பட்ட காலமுண்டு. இப்போதும் சில ரசிக ஆசிரியர்கள் இதனைச் செய்து வருகின்றனர். ஆனால், சலங்கையில் ஒரு சங்கீதம் பட பாடல்களை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது ஏனென்று தெரியவில்லை. அவற்றை எல்லாம் விட, இந்த பாடல் நடன அசைவுகளுக்குக் கடினமானதாக இருக்கும் என்ற எண்ணமா? தெரியவில்லை. 

சரி, படத்தின் பாடல்களுக்கு வருவோம்.
’கனவா இது உண்மையா மனமே பதில் இல்லையா’ பாடல் டூயட் ரகத்தில் இருந்தாலும், இதுவும் நாட்டிய ஆலாபனைக்கான பாடல்தான். இசை மற்றும் நடனத்தை வெளிப்படுத்தும் பாடலில் காதலைக் கலக்கும் வரிகளைக் கொண்டது. இதன் இடையே, எஸ்பிபியின் குரல் முடிந்து இடையிசை ஒலிக்கும் நேரத்தில் ’மனமே பதில் இல்லையா’ என்ற எஸ்.ஜானகி ஒரு வரியை மட்டும் பாடுவார். அதனைத் தொடர்ந்து, குறு நடனத்துக்கான இசை ஒலிக்கும். முதலில் இதனைத் துருத்தலாக நினைத்து, அதன்பிறகு அதுவே இப்பாடலுக்கு அழகூட்டுவதாக உணர்ந்தேன். இது வெறும் காதல் பாடல் வரிசையில் இடம்பெறக்கூடாது என கவனமாகக் கோர்க்கப்பட்டிருப்பது திரும்பத் திரும்பக் கேட்டபோது புரிந்தது.

courtesy- google god
சலங்கையில் ஒரு சங்கீதம் எனத் தொடங்கும் ’நடராஜன் குடிகொண்ட கலையல்லவா’ பாடல், சதிர் எனப்படும் பரதநாட்டியப் பிரியர்களுக்கான பிரத்யேகமான பாடல். இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடத்தொடங்கும்போது, பின்னணியில் ஒலிக்கும் அந்த ஹம்மிங் ஆஹா ரகம். இளையராஜாவின் சிறப்பே, கர்நாடக இசையும் பரதநாட்டிய அடிப்படையும் தெரியாதவரையும் ரசிக்க வைக்கும் செவ்வியல் ரகப் பாடல்களை உருவாக்குவது. சலங்கை ஒலி, சிந்துபைரவி, சிப்பிக்குள் ஓர் முத்து, வைதேகி காத்திருந்தாள், காதல் ஓவியம் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களைப் போலவே இதுவும் ஒரு அற்புதப்பாடல். பாடும் நிலா பாலு வலைப்பூவில் 12 ஆண்டுகளுக்கு முன்பே இதனைச் சிலாகித்து எழுதப்பட்டுள்ளது. பாடல் வரிகளைப் படித்தவாறே கேட்க விரும்புபவர்கள் இந்த வலைப்பூ சென்று ரசிக்கலாம். ( http://myspb.blogspot.com/2006/05/4.html )

‘உன் வேதனை ஒரு ஆலாபனை’ பாடலில் ஒலிக்கும் தபேலா இசையும் சலங்கையின் ஒலியும் ஒரு கதக் இசைப்பாடலைக் கேட்கும் உணர்வைத் தரும். இடையில் வரும் இசை மலையாளக் கரையோரம் ஆடும் கதகளியாட்டத்தின் பின்னணியைத் தரும். இந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் ‘தையா தையா தக்கத் தையா’ சொல்லாடல்களை கொன்னக்கோல் வகைப்படி பின்னி எடுத்திருப்பார் இளையராஜா. இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் உள்ளடக்கத்தில் கடுமையான சிக்கல் நிறைந்தவை என்று கர்நாடக இசை அறிந்தவர்கள் கூறுவார்களென நம்புகிறேன்.  

’யாரோடு யாரோ நீ எந்த ஊரோ’ பாடல் அற்புதமான மெலடி மெட்டு. யாரோடு யாரோ என்று தொடங்கும் சரணத்தின் பின்னணியில் ஒலிக்கும் ஜால்ராவின் ஜல்ஜல் சத்தம் பாடல் முழுவதும் ஆங்காங்கு பெருகியும் குறுகியும் ஒலிப்பது ஒரு மென்கிறக்கத்தைத் தருகிறது. ’உன் மவுனங்கள் கூட ராகங்கள் தானா?’, ’நான் மீட்டும் வீணை உன் மேனி மானே?’ ’பருவம் அடைந்த கனவு இவள் சலங்கை அணிந்த நிலவு’ போன்ற வரிகள் நாயகி பானுப்ரியாவுக்காகவே எழுதப்பட்டிருப்பது போன்றிருக்கும். 

courtesy- google god
பாடலின் இடையிசையிலும் கூட எஸ்பிபியை கர்நாடக இசை மரபில் ஹம்மிங் செய்ய வைத்து இந்தப் பாடலில் அசத்தியிருக்கிறார் ராஜா. இசை மற்றும் நடனம் சம்பந்தப்பட்ட படமென்பதால், இப்படியொரு பாணியை அவர் கடைபிடித்திருக்கக்கூடும். இந்தப்பாடலின் வரிகளை எஸ்பிபி தன் குரலால் வளைத்து நெளிக்கும்போது, மோகன் கையில் மைக் வைத்துக்கொண்டு நிற்பது போன்ற பிம்பம் மனதில் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

’யார் அழைத்தது கனவு ராணியா நான் ரசிப்பது கலையின் வாணியா’ என்ற பாடலில் ஆஆஆ.. என்ற ஹம்மிங்கில் தொடங்கி மிருதங்கத்தின் தனியாவார்த்தனத்துடன் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. தொடர்ந்து இந்தப் பாடல் ஆண் மற்றும் பெண்ணுக்கான போட்டிப்பாடலாக உருமாறுகிறது. அதற்காக, சாதாரணமாக இதனைக் கேட்டால் போரடிக்கும் என்று நினைக்கக்கூடாது. அப்படி நினைத்த காரணத்தினால் வைதேகி காத்திருந்தாள், காதல் ஓவியம் உட்பட பல படங்களின் பாடல்களை வெகுநாட்கள் ரசிக்காமல் மிஸ் செய்திருக்கிறேன். இதில் இடம்பெற்றுள்ள ’எந்தன் உள்ளம் பொங்கிவிட்டது உந்தன் கண்ணில் தங்கிவிட்டது’ என்ற வரிகள் மிகவும் பிடித்துப்போன வரிகள்.

courtesy - google god
’மனதிலே ஒரு கொண்டாட்டம்’ இந்த ஆல்பத்தின் சுமாரான பாடல் என சொல்லலாம். ஆனால் கதையோட்டத்தில் இது முக்கியமான பாடலாகவும் இருக்கக்கூடும். இப்போது கேட்கும்போது பெரிதாக நம் மனதில் ஈர்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும், படத்துடன் ஒன்றும்போது இதுவும் நமக்குப் பிடிக்குமென்றே தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல், கதையோட்டத்தின் எதிர்பாராத தருணங்களில் பாடல்களைக் கோர்த்த ராஜாவின் திறமையும் இதுபோன்ற பாடல்களில் அதீதமாக வெளிப்படும் என்பதையும் இங்கு நம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பாடலுக்கான சிச்சுவேஷனை திரைக்கதையில் எங்கு வைப்பது என்று தடுமாறுபவர்கள் 80-90களில் வந்த ராஜாவின் திரைப்படங்களைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

வம்சி – இளையராஜா கூட்டணியைச் சில வெறிபிடித்த தெலுங்கு சினிமா ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கக்கூடும். இளையராஜா வேறுபட்ட இசை வடிவங்களை அளிக்கக் காரணமாக இருந்த சில புகழ்பெற்ற இயக்குனர்கள் தமிழ் சினிமாவிலும் நிறைய பேருண்டு. அவர்களை விடுத்து மற்ற மொழிகளிலும் இப்படிச் சில அதீத திறமையுள்ள இயக்குனர்கள் இருக்கின்றனர் என்பதைத் தனது இசையின் மூலமாக நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் இளையராஜா. 

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், புதிதுபுதிதாக ரசிகர்களை உருவாக்கும் கலைஞர்களுக்கும் அவர்களது படைப்புகளுக்கும் காலம் என்பது ஒரு தடையல்ல. இசைக்கும் காட்சிக்கும் இடையிலான காலக்கணக்கை இம்மி பிசகாமல் பிணைக்கத் தெரிந்த கலைஞர்களில் ஒருவர் ராஜா. காலத்தின் பார்வையில் இளையராஜாவின் தோற்றம் வரையறுக்க முடியாத ஒரு தேற்றம்

No comments: