Jun 10, 2018

இசைவோம்.. இசையாவோம்.. இளையராஜாவினால்..! – 4


courtesy: indiaglitz

சோகமும் ஒரு சுகமான உணர்வுதான் என்று சொன்னால், இன்றைய தலைமுறையின் உடல் அழுத்தம் ஏகத்துக்கும் எகிறும். அந்தச் சொல்லில் இருந்து விலகியிருக்கக் கற்றுக்கொடுத்ததாலேயே, இன்று அவர்களுக்குத் தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம் குறைந்துவிட்டது என்று தோன்றுகிறது. எப்போதும் துள்ளல் இசையைக் கேட்பவர்களுக்கு, மெலடி மெட்டு கூட சோக கீதமாகத் தான் தென்படுகிறது. இப்படிப்பட்ட சூழலுக்கு நடுவே, இன்றைய எம்பி3 யுகத்திலும் சில அங்கிள்கள் மற்றும் ஆண்டிகளின் மனதில் சோக கீதங்கள் தொகுப்புகளுக்கான மவுசு மங்காமல் இருக்கிறது. 

ஏ.ஆர்.ரஹ்மான் படங்களிலும் சோகமான ராகங்கள் உண்டென்றாலும், அதற்கு முந்தைய காலகட்டம் தான் சோகம் பாட தோதான களம் அமைத்துக் கொடுத்தது என்பதே உண்மை. சோக ராகங்கள் என்று இசைத்தட்டு வெளியிடும் அளவுக்கு, தமிழ் திரையிசையில் சோகத்தை இசைக்கும் கீதங்களின் எண்ணிக்கை மிக அதிகம். வேலையில்லாத் திண்டாட்டமும் கலப்புத் திருமணத்தை நோக்கி நகரமுடியாததால் உண்டான காதல் தோல்விகளும் நியாய தர்மங்கள் மீதான உடைப்புகளும் பெருகிய காலகட்டத்தில், இந்த சமூகத்தின் சோகமும் அதீதமாகவே இருந்திருக்கும். 

courtesy - google god
உள்ளும் புறமும் ஒரே உணர்வைப் பெறும் வகையில், சோகத்தைப் பிரதிபலிக்கும் கலையம்சங்கள் கொண்டாடப்படும் வாய்ப்புகள் பெருகியிருந்த நேரம். அதனால், சினிமாவின் திரைக்கதையிலும் இசையிலும் சோகம் கண்டிப்பாக இடம்பெற வேண்டுமென்ற நியதி இருந்ததில் தவறேதுமில்லை. இதன் காரணமாக, 80களிலும் 90களிலும் வெளியான பெரும்பாலான படங்களில் ஆண் அல்லது பெண் கதாபாத்திரங்கள் சோகமாகப் பாடும் ஒரு பாடல் கண்டிப்பாக இடம்பிடித்தது. 

இந்த விஷயத்திலும் இளையராஜா ஒரு வித்தகர். சுகமான ராகத்தில் டூயட் பாடலைத் தந்துவிட்டு, அதிலுள்ள தாள அமைப்பையும் பாடல் வரிகளையும் சற்றே மாற்றி சோக ராகத்தைப் பிழிந்துவிடுவார். 80களில் வந்த அவரது ஏராளமான பாடல்களை இதற்கு உதாரணம் காட்டலாம். இதுபோக, எஸ்.ஏ.சி. போன்ற இயக்குனர்கள் ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு வந்து நாயகனுக்கும் நாயகிக்கும் புத்தி போதித்த பாடல்களும் உண்டு. தாய்ப்பாசத்தை நினைவிலிருத்தி வருந்தும் பாடல்களும் உண்டு. இளையராஜாவின் படங்களில், இம்மாதிரிப் பாடல்களை அவரே பாடிவிடுவார். அவை தனித்தொகுப்பாக வெளிவந்துள்ளன என்பது தனிக்கதை.


‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ என்று டூயட் பாடினாலும், நம்மாளுங்களைப் பொறுத்தவரை சோக இசைக்கு எப்போதும் இளையராஜாவின் குரலே சாலப்பொருத்தம். அவரது குரலில் இருக்கும் கரகர தன்மையும், அடிநாதமாக இருக்கும் பூடகத்தன்மையும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட இளையராஜா, சோகமே அடிநாதமான திரைக்கதைகளுக்கு எப்படி இசையமைத்திருப்பார். இதற்கொரு சரியான உதாரணம் 1982ல் வெளிவந்த ‘ஈரவிழி காவியங்கள்’ திரைப்படம் என்று தோன்றுகிறது. பெயருக்கேற்றாற்போல, இந்தப் படத்தின் சுகமான ராகங்களிலும் சோகம் எட்டிப்பார்ப்பது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. (மற்றவர்கள் கேட்டுவிட்டு, தங்களது கருத்தைப் பகிரலாம்.)

ஈரவிழி காவியங்கள் படத்தில் பிரதாப் போத்தன், ராதிகா, வெண்ணிற ஆடை மூர்த்தி, கமலா காமேஷ் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர். ஜெயா மூவிஸ் தொலைக்காட்சியில் அவ்வப்போது திரையிடப்படும் என்றாலும், இதுவரை இந்தப் படத்தை முழுமையாகப் பார்க்கவில்லை. ஆனால், இந்த படத்தின் காட்சியமைப்பில் அதீத யதார்த்தம் தென்பட்டதாக உணர்ந்திருக்கிறேன். 

படத்தின் இயக்குனர் என்று பி.ஆர்.ரவிஷங்கர் என்ற பெயரைக் காட்டுகிறார் கூகுள் ஆண்டவர். படத்தின் ஒளிப்பதிவு நம்ம அசோக்குமார். இவரது பெயரைப் பார்த்ததும், படத்தில் நிரம்பியிருந்த யதார்த்தம் ஆச்சர்யத்தில் இருந்து கீழிறங்கி வெகு சாதாரணமாகிப் போனது. கண்டிப்பாக, இது அவருக்கான புகழ்மாலைதான். 

இந்தப் படத்தின் பாடல்கள், கேட்டவுடன் பச்செக்கென்று மனதில் ஒட்டிகொண்டது. காரணம், இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் அந்த காலகட்டத்து இசைத்தன்மையிலிருந்து விலகியிருக்கின்றன. அன்றைய இசை ரசிகர்களுக்கு, ட்ரெண்டுக்கு மாறாகப் புதுவித அனுபவத்தைக் கண்டிப்பாகத் தந்திருக்கும் இந்த பாடல்களின் ஒலிப்பு. 

தனக்கேயுரிய லாலாலாலா.. முனகலுடன் இளையராஜா பாடும் ‘தென்றலிடை தோரணங்கள் தோலினிலே கூந்தலலை’ பாடல் கேட்கும்போது அற்புதமான உணர்வைத் தருகிறது. இரண்டு நிமிடப் பாடலுக்கும் முன்னிசை, இடையிசை என்று பிரமாதப்படுத்தியிருக்கிறார் ராஜா. இதனை எழுதியவர் எம்.ஜி.வல்லபன் என்று சொல்கிறார் கூகுள் ஆண்டவர். இந்தப் படத்தில் இதேபோல இன்னும் இரண்டு குறும்பாடல்கள் உண்டு.

‘பழைய சோகங்கள்’ பாடல் தொடங்கும்போது அற்புதமான மெல்லிசையுடன் தொடங்குகிறது. அதற்கு மாறாக, ’பழைய சோகங்கள் அழுத காயங்கள்’ என்ற வார்த்தைகளைத் தாண்டி, பாடலுக்கு அதீத சோகத்தைக் கொடுப்பது இளையராஜாவின் தனித்தன்மை. இதில் இளையராஜாவின் குரல் இடைவிடாமல் ஒலிக்கும்போது, பின்னணியில் கிடார் இசையும் கீபோர்டு இசையும் மெலிதாக ஒலிக்கும். இடையிசையின்போது அது புதிய தளத்துக்கு மேலேறும். இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து. பாடலின் இடையில் ‘ரகசிய ரணங்களோ’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது ராஜாவின் குரலில் இருக்கும் ஏற்ற இறக்கம், அவர் எந்த அளவுக்கு இந்தப் பாடலை ரசித்து இசையமைத்திருக்கிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லும்.

’காணும் சந்தோஷம் யாவும் பொய்வேஷம்’ பாடல் இளையராஜாவின் குரலில், கூடுதல் துயர் தாங்கி ஒலிக்கும். இந்த குறும்பாடலிலும் மெலிதான இசையை மட்டுமே முன்னும் பின்னும் ஒலிக்கவிட்டிருப்பார் ராஜா. தனி ஆல்பங்களுக்குப் புதுவித இசையைத் தருவேன் என்று இன்றைய இசையமைப்பாளர்கள் சொல்லிவரும் சூழலில், தனது வேறுபட்ட இசையார்வத்தை வெளிப்படுத்த ஒரு படத்தின் களத்தைப் பயன்படுத்தியிருப்பது நிச்சயம் ராஜாவின் தனித்தன்மைதான்.
courtesy - google god
தன்னம்பிக்கை மிளிரும் பாடலில் கூட, மனதில் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒருவித தயக்கத்தை எப்படிக் கொண்டுவருவது? ’என் கானம் இன்று அரங்கேறும்’ பாடலில் வார்த்தைகளில் இருக்கும் தயக்கத்தைவிட, இளையராஜாவின் குரலில் ஒளிந்திருக்கும் மாயத்தன்மையே அந்த உணர்வை அதீதமாக உணர்த்துகிறது. இந்தப் பாடலை அவரோடு இணைந்து பாடியவர் ஜென்சி. திரையிசையில் மின்னலாய் தோன்றி மாயமான ஜென்சி மட்டுமே, இந்த படத்தில் ஒலிக்கும் ஒரே பெண்குரல்.  

மடை திறந்து தாவும் நதியலை நான் என்று எழுதிய வைரமுத்து, இந்தப் பாடலையும் எழுதியிருப்பது நிச்சயம் ஆச்சர்யம்தான். வழக்கமாக இதே தொனியிலான பாடல்களை எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் போன்றவர்களின் குரல்களைக் கொண்டு நிரப்பியிருப்பார் ராஜா. இந்த படத்தின் கதாபாத்திரத்துக்கு அந்த தன்மை தேவையில்லை என்று அவர் நினைத்ததே, பாடல்களையும் மீறி கதையிலும் திரைக்கதையிலும் அவர் கொண்டிருந்த அக்கறைக்குச் சான்று.

’கனவில் மிதக்கும் இதயம் முழுதும் புதுராகம் உருவாகும்’ பாடலைப் பாடியிருப்பவர் கே.ஜே.யேசுதாஸ். இந்த பாடல் தொடங்கும்போது வயலின், கிதார் இசை இருவேறுபட்ட நாகங்களாய் ஒன்றன் மீது ஒன்றேற, அதனைத் தொடர்ந்து ஒலிக்கும் அந்த ட்ரம்ஸ் இசை ஒரு கனவுலகத்துக்குள் நம்மை அழைத்துச் செல்லும். அதற்கேற்ப, பாடலின் வரிகள் தொடரும். இந்தப் பாடலின் முடிவில் பாடல் வரிகளை விசிலடிப்பதன் மூலம் நிரப்பியிருப்பார் ராஜா. இந்தப் பாடலின் இசைக்கு நடுவே தனது வார்த்தைகளை நிரப்பியவர் கங்கை அமரன்.

நாயகனின் காதலைப் பற்றிய எண்ணத்தை வெளிப்படுத்தும் பாடலில் கூட, அபஸ்வரம் ஒலிப்பது போலத் தொடங்குவது இளையராஜாவின் அதீத தன்னம்பிக்கைக்கான எடுத்துக்காட்டு. திரைக்கதையை மீறி படத்தின் எந்தப் பாடலும் துருத்திக்கொண்டு ஒலிக்கக்கூடாது என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தவர் என்பதற்கு இந்தப் பாடலே போதுமானது. ‘காதல் பண்பாடு யோகம் கொண்டாடு’ என்ற வைரமுத்துவின் கைவண்ணத்துக்கு இடையில் வரும் இசையே, அது பல சீரியசான நிகழ்வுகளின் பின்னணிச்சத்தத்தை இடம்பெயர்த்து நிற்பதை உணர முடியும். இந்தப் பாடலை பாடியிருப்பவர் கே.ஜே.யேசுதாஸ். 

courtesy - google god
பாடலின் நடுவே, ’பாடகன் இங்கே மாலைகள் எங்கே தேவதை எங்கே.. சொல்லுங்களேன்..’ என்று நம்மிடம் கேட்பார் கே.ஜே.யேசுதாஸ். அதனையடுத்து சில நொடிகள் மவுனம் இடம்பெறும். பாடலுக்கு எந்த வாத்தியங்களும் இல்லாமல் இசையமைக்க முடியும் என்று அந்த இடத்தில் காட்டியிருப்பார் ராஜா. கண்டிப்பாக, முதல்முறை இயக்குனர் ஆகும் கலைஞர்களுக்கு, இளையராஜாவின் பாடல்களும், அவை இடம்பெறும் திரைக்கதையிலுள்ள காட்சிகளும் நிச்சயம் ஒரு வழிகாட்டும் கையேடுதான்.

மாண்டேஜ் காட்சிகள் போல, இந்தப் படத்தின் பாடல் வரிகள் அனைத்தும் துண்டுதுண்டு கவிதைகளாக இருப்பது திட்டமிட்டு கோர்க்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், அதுவே இப்படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் மகுடத்தைச் சூட்டுகின்றன. (என்னைப் பொறுத்தவரை..)
இன்று நம் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் சோகம் என்ற ஒன்றை விலக்க நினைப்பதால்தான், அது நம் வாழ்வின் எல்லா கணங்களிலும் ஒட்டிக்கொள்வதாக நம்புகிறேன். வெற்றியை விரும்பும்போது, தோல்வியைத் தாங்கிக்கொள்ளவும் பழக வேண்டும். அதேபோல, சுகத்தை விரும்பும் எவர் ஒருவரும் சோகத்தையும் எதிர்கொள்ளவும் துணிய வேண்டும். அதற்கான எளிய வழிமுறையே, சோகப்பாடல்களைக் கேட்கும் வழக்கம். சோகத்தை ரசிப்பதனால் மட்டுமே, புதிதுபுதிதாகப் பல சோக நிகழ்வுகள் நம் வாழ்வோடு ஒட்டிக்கொள்ளும் என்பது நிச்சயம் மூடநம்பிக்கையின்றி வேறல்ல. 

courtesy - google god
 திரைக்கதையில் தன் பாடல் இடம்பெறுவதற்கான புதுவித சூழல்களைத் தேர்ந்தெடுத்த இளையராஜாவுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும். அதனால்தான், சுகமான ராகங்களைப் போலவே சோக கீதங்களுக்கும் தந்துள்ளார் நம் மன அலைகளை அமைதிப்படுத்த.. 

பன்முகக் கலைஞரான டி.ராஜேந்தர் இசையத்த படங்களிலும் சோகத்தை வெளிக்காட்டும் பாடல்கள் உண்டு. அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தைத் தருவது இளையராஜாவின் பாடல்கள். குறிப்பாக, இன்றைய பண்பலை வானொலி அலைவரிசைகளில் ரகசியமாகப் பேசும் ஆர்ஜேக்களுக்கு ‘ஈரவிழி காவியங்கள்’ படத்தின் பாடல்கள் முன்னோடி என்றால் மிகையில்லை!

No comments: