Apr 22, 2018

இசைவோம்.. இசையாவோம்.. இளையராஜாவினால்..! – 3


Courtesy - Google God

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய பிரபலமான பாடல். முக்கால் சொச்சம் திரைப்படங்களில் காதலை மட்டுமே பேசுபொருளாகக் கொண்ட 80களில் இந்தப் பாடலைத் படத்தின் தலைப்பாகப் பயன்படுத்தியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. கிட்டத்தட்ட ‘ரொமாண்டிக் த்ரில்லர்’ என்ற வகையறாவில், 1987ஆம் ஆண்டு ‘நினைக்கத் தெரிந்த மனமே’ திரைப்படம் வெளியானது. மோகன், ரூபிணி, சந்திரசேகர் உட்படப் பலரும் நடித்த படம் இது.
கதைக்கு மணியன், திரைக்கதை மற்றும் வசனத்துக்கு தினகர், ஒளிப்பதிவுக்கு ராஜராஜன், படத்தின் இயக்குனர் சுரேஷ் என்று இப்படத்தின் தொழில்நுட்பப் பட்டாளம் நீள்கிறது. ஒளிப்பதிவாளர் ராஜராஜன் தவிர மற்றனைவரும் ஓரிரண்டு படங்களோடு தங்களது கவனத்தை வேறுபக்கம் திருப்பியிருக்கக்கூடும். 

Courtesy - GoogleGod
இந்த படத்திற்கு இசையமைத்த இளையராஜா, அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் காமகோடியானுக்குத் தந்துள்ளார். எல்லா பாடல்களும் எல்லா காலத்துக்குமேற்ற புத்துணர்வோடு இருப்பதும், ’பூவே.. செம்பூவே..’ பாடலைப் போலவே இதிலுள்ள பாடல்கள் அனைத்தும் மேற்கத்திய இசையைக் கேட்ட உணர்வைத் தருவதும் நிச்சயம் ஆச்சர்யம்தான்.  

ஒரு மணி நேரத்திற்குள் சில பாடல்களுக்கு இசையமைக்கும் வரம் பெற்ற இளையராஜா, ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று படங்களின் இசை சம்பந்தப்பட்ட பணிகளை நிறைவு செய்து தந்த காலம் ஒன்று உண்டு. இன்று, அதே பணிகளைச் செய்ய பல மாதங்கள் ஆகிறது என்பதே உண்மை. எவ்வளவு வேகமாகப் பணியாற்றியானாலும், பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிற்பம் போல இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் அமைந்திருப்பது நிச்சயம் ஆச்சர்யம் தான். 

Courtesy - GoogleGod
இந்தப் பாடல்களைக் கேட்கும்போதே, அப்போதைய இளைஞர்களின் விருப்பமாக இந்தப்படம் அமைந்திருக்கும் என்பது புரிகிறது. அதற்கேற்ப, படமும் காதலைப் பேசுபொருளாகக் கொண்டுள்ளது. ‘மைக்’ மோகன் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு பாடல் பாடுபவராகவே பல திரைப்படங்களில் வந்துபோனவர் நடிகர் மோகன். அவரது படத்திற்கு இளையராஜா இசை என்றாலே, எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும் என்ற கருத்து இசை ரசிகர்களிடையே உண்டு. நினைக்கத் தெரிந்த மனமே பாடல்களும், அதனை 200 சதவீதம் பூர்த்தி செய்கிறது. 

‘சின்னச் சின்ன முத்து நீரிலே தேகம் வண்ண வண்ணக் கோலம் போடுதே’  பாடலைப் பாடியிருக்கின்றனர் கே.ஜே. ஜேசுதாஸ் மற்றும் எஸ்.ஜானகி. இதன் பாடல் வரிகளுக்கு நடுவே வரும் இடையிசையானது, ட்ரம்ஸ், சாக்ஸபோன் என்று ஒவ்வொரு வாத்தியத்துக்குமான ஜுகல் பந்தியைக் கேட்பது போலிருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் நாயகன் அல்லது நாயகிக்கான தனிப்பாடல் அல்லாது, துள்ளல் ரகத்தில் ஒரு டூயட் பாடல் இடம்பெறுவது அந்த காலத்தில் கட்டாயமாக இருந்தது. (எனது அனுமானிப்பைப் பொறுத்தவரை..) அதனைப் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்திருக்கும் சின்னச் சின்ன முத்து நீரிலே.. பாடல்.

’எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்..’ பாடல் காதலின் திளைப்பில் இருக்கும்போது, ஒருவர் மற்றொருவரிடம் சரணாகதி அடையும் நிலையை விளக்குகிறது. கே.ஜே.ஜேசுதாஸும் சித்ராவும் பாடிய பாடல் இது. மெல்லிசைக் கச்சேரி நடத்துபவர்கள் இளையராஜாவின் பாடல்களைச் சிலாகித்துப் பயன்படுத்துவார்கள். அவர்கள் அதனைப் பயன்படுத்த வேண்டுமென்ற காரணத்திற்காகவே, ஒரு திரைப்படத்தில் சில பாடல்களை இளையராஜா அளிக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்குள் உண்டு. இந்த படமும் அதனை உறுதி செய்கிறது. பொது இடங்களில் அவர் பாடி வளர்ந்த அனுபவமும் இதன் பின்னிருக்கிறது என்று நம்புகிறேன்.

இதேபோல, இதனைத் தனியாகவும் கே.ஜே.ஜேசுதாஸ் பாடியுள்ளார். டூயட் பாடலை, ஏதேனும் ஒரு பாடகர் அல்லது பாடகியைப் பயன்படுத்தி சோக ரசம் பிழிவதும் இளையராஜாவின் சிறப்புகளில் ஒன்று. இப்படத்தில் அவ்வாறு இருக்கிறதா எனத் தெரியவில்லை. அறிய விரும்புபவர்கள், யூடியுப் தளத்தில் முழுப்படத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Courtesy - GoogleGod

‘இளமை ரதத்தில் இயற்கை ரதத்தில்’ பாடல் நாயகிக்கானது. கிட்டத்தட்ட நாயகி அறிமுகப் பாடல் போன்ற சாயலில் படைக்கப்பட்டது. சித்ராவின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் மட்டுமே, இந்த ஆல்பத்தில் சுமாரான பாடல் என்று எண்ண வைக்கும். ஆனால் ஓரிரு முறைக்குப் பின்பு, இதுவும் பிடித்துப் போகும்.

‘கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல் நெஞ்சத்தை நீ தந்தால் காதல்’ பாடலில், படத்தின் நாயகன் ஒரு புகைப்படக் கலைஞர் என்று உணர்த்தும்விதமாக 'ஸ்மைல் ப்ளீஸ்' என்ற வார்த்தையுடன் தொடங்கும். இன்றைய செல்பி தலைமுறைக்கு இந்த வார்த்தை கண்டிப்பாக ஆறாவது விரல் தான். இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் கே. ஜே.ஜேசுதாஸ்.
இந்தப் படத்தில் ஜானகி, சித்ரா தவிர மூன்று பாடல்களில் இவர் தான் சாம்ராஜ்யம் நடத்தியுள்ளார் என்பது கவனிப்புக்கு உட்பட வேண்டியது. இளையராஜாவின் இசையில் எல்லா பாடல்களையும் ஜேசுதாஸ் பாடிய வகையிலும் இது முக்கியமான ஆல்பம் ஆகும். 

Courtesy - GoogleGod

ஊட்டி, மழை, ரயில்வே ஸ்டேஷன் என்று இந்த படம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும், பாடல்கள் படமாக்கப்பட்டதில் அந்த திருப்தி கிடைக்கவில்லை. இதற்காக, ஒளிப்பதிவாளர் ராஜராஜன் மன்னிக்கக் கடவது. இளைய ராஜாவை நினைக்கும் மனங்களுக்கு இந்த படத்தின் பாடல்கள் என்றும் நினைவில் தெரியும், பார்வை மறைந்த பின்பும் ஆன்மக் கண்ணாடியில் ஒளிரும் பிம்பம் போல...

No comments: