Feb 17, 2018

பாஜக ஆடும் ‘நெல் - உமி’ விளையாட்டு!

 

உதய் பாடகலிங்கம்

எல்லாத் தேர்வுகளிலும் வெற்றிபெறும் மாணவனுக்கு, ஆண்டு இறுதியை நினைத்து எந்தக் கவலையும் இருக்காது. ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை வசப்படுத்திவரும் பாஜகவும் இத்தகைய மனநிலையில்தான் இருக்க வேண்டும். ஆனால், பாஜகவோடு கூட்டணி சேர்ந்த கட்சிகள் இதே மகிழ்ச்சியை உணர்கின்றனவா? இந்தக் கேள்விக்கு, மிக வேகமாக ‘இல்லை’ என்று பதில் சொல்லிவிடலாம். மகாராஷ்டிராவிலும் ஆந்திராவிலும் பாஜக கூட்டணிக்கு நேர்ந்திருக்கும் பின்னடைவே இதற்கு உதாரணம்.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து, தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தோடு இணைந்து போட்டியிட்டு ஆந்திராவில் பாஜக பெரும்வெற்றி பெற்றது. அடுத்த இடத்தைப் பிடித்தது ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். இந்தத் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜகவைத் தேடிப்பிடித்து கூட்டணி அமைத்தவர் சந்திரபாபு. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்குமளவுக்கு அவர் பாஜகவுடன் நெருக்கம் காட்டினார். அதனாலேயே, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பாஜகவுக்குப் பகிரங்க ஆதரவைத் தெரிவிக்க இயலாமல் தவித்தார். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.
தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகளின் நிலை
பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் தொடர வேண்டுமா, வேண்டாமா என்று தற்போது சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பிவருகிறார். கடந்த ஓராண்டாக, தெலுங்கு தேசம் ஆட்சியை பாஜகவினர் தொடர்ச்சியாக விமர்சனம் செய்துவருவதே இதற்குக் காரணம். கூடவே, மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்கட்சிகளை தெலுங்கு தேசம் ஆதரித்ததும் சேர்ந்துகொண்டது. எப்போது கூட்டணி உடையும் என்ற நிலையே ஆந்திராவில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நிலவுகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் நிலைமை இன்னும் மோசம். அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே, பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே முட்டல் ஏற்பட்டது. அதிக இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சொல்ல, சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலை பெற, வேறு வழியில்லாமல் கூட்டணி சேர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானது சிவசேனா. இந்தக் களேபரம் நிகழ்ந்து முடிவதற்குள், சிவசேனா கட்சியைச் சேர்ந்த சுரேஷ் பிரபுவைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டது பாஜக.
அதன்பின் கடந்த நான்காண்டுகளாகவே, அங்கு நடைபெற்றுவரும் கூட்டணி ஆட்சி ‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ ரகம்தான். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன. கொள்கைபூர்வமாக, பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை. ஆனாலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கண்டிப்பாகக் கூட்டணி கிடையாது என்று இப்போதே அறிவித்துவிட்டார் உத்தவ்.
இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் கூட்டணியில் முறிவு என்றால் பரவாயில்லை. ஆனால், மற்ற மாநிலங்களிலும் இதே அணுகுமுறையைத்தான் பின்பற்றுகிறது பாஜக. வரப்போகும் நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத ஜனநாயக மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது பாஜக.
இந்தத் தேர்தல் அறிவிக்கப்படும் வரை, நாகா மக்கள் முன்னணியுடன் பாஜக கூட்டு சேர்ந்திருந்ததைக் கவனிக்க வேண்டும். நாகாலாந்து தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அந்தக் கட்சி உட்பட 11 கட்சிகள் முடிவெடுத்தன. நாகாலாந்து மாநில பாஜகவும் முதலில் அதற்கு ஒப்புக்கொண்டது; இப்போது கட்சி மேலிடத்தின் அறிவுரைக்கேற்ப, கூட்டணியை மாற்றிக்கொண்டு போட்டியில் இறங்கியுள்ளது.
தமிழகம் என்னும் உதாரணம்
பாஜக தனது கூட்டணிக் கட்சிகளை எப்படிக் கையாள்கிறது என்றறியத் தமிழகத்திலுள்ள நிலவரமே போதுமானது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியன தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தன.
பாஜகவின் கொள்கைபூர்வமான முடிவுகளுக்கு, இந்தக் கட்சிகள் தற்போது அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், பாஜக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் நீடிக்கின்றன என்ற சந்தேகமே மேலெழுகிறது. உள்ளாட்சித் தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ உடனடியாக வந்தாலொழிய இதனைக் கண்டுபிடிக்க வேறு வழியில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் 48 கட்சிகள் அங்கம் வகிப்பதாகச் சொல்கிறது வீக்கிபீடியா. மேலே சொன்ன ஐந்து கட்சிகளும் அவற்றில் அடக்கம். ஆனால், இதில் ஒரு கட்சியும் பாஜகவின் கொள்கைகளையோ, திட்டங்களையோ ஆதரிக்கவில்லை. இப்படியே, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை இருந்தால் என்னாவது?

கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் முதலான மாநிலங்களில் பாஜகவுக்குக் கூட்டணிக் கட்சிகளின் தயவு வேண்டாமென்ற சூழலே நிலவுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டணியை விட்டு வெளியேறும்பட்சத்தில், ஜெகன்மோகன் ரெட்டியுடன் கூட்டணி வைக்க பாஜக தயங்காது என்று கூறப்படுகிறது. அது போலவே, தெலங்கானாவிலும் அமித் ஷாவுடன் கைகோக்கத் தயாராக இருக்கிறார் சந்திரசேகர ராவ்.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களைத் துடைத்தெறியும் எண்ணத்திலுள்ள மம்தா பானர்ஜி, பாஜகவுடன் அணி சேருவதைவிடத் தனது தாய்க் கழகமான காங்கிரஸுடன் கூட்டணி சேரவே விரும்புவார். ஆனால், மேற்கண்ட மூன்று கட்சிகளையும் தவிர்க்கவே இப்போதுவரை அவர் முயற்சித்துவருகிறார்.
ஒடிசா மாநிலச் செய்திகள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுவிடாத வகையில், அங்கு நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்துவருகிறது. ஜெயலலிதா, மம்தா போலவே, சில ஆண்டுகளுக்கு முன்பு நவீனும் பாஜகவுடனான கூட்டணி உறவை முறித்துக்கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.
பீகாரைப் பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, உபேந்திர குஸ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகளுடனான பாஜக உறவில் எப்போதோ ஓட்டை விழுந்தாகிவிட்டது. சத்தம் காட்டாமல் இருக்கும் ராம்விலாஸ் பாஸ்வான்கூட, தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தனது குரலை உயர்த்தலாம். நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கும் பாஜகவுக்கும் மோதல் வராது என்று உறுதியளிக்க, இரு கட்சிகளுமே முன்வராது. ஏனென்றால், கடந்த தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாலேயே, தே.ஜ.கூட்டணியை விட்டு விலகியவர் நிதிஷ். இப்போது, அவர் அதே பாஜகவின் ஆசியுடன் ஆட்சி நடத்திவருகிறார்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கூட்டணியோடு சேர்ந்து ஆட்சியமைத்துள்ளது பாஜக. மேகாலயா, நாகாலாந்து, திரிபுராவில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் இந்த மாதம் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி, புதுச்சேரியில் விரைவில் மாற்றம் ஏற்படுமென்று கூறிவருகிறது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் பாஜக கூட்டணி உறுதியற்ற தன்மையுடன் இயங்கிவருகிறது.
இப்படியொரு நிலையில், பெரிய மாநிலக் கட்சிகளுடன் உறவைத் துண்டித்துக்கொள்ள பாஜக ஏன் விரும்புகிறது? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி என்ற ஒற்றைச் சொல்லினால் வெற்றி பெற்றதுபோல, இந்த முறையும் அதையே பின்பற்றலாம் என்ற அதீத நம்பிக்கை இதன் பின்னிருக்கக் கூடும். ஆனால், அதிசயங்கள் அடிக்கடி நடவாது என்பதை பாஜகவினர் நினைவில்கொள்ள வேண்டும். அதீத தன்னம்பிக்கைதான் 2004இல் ‘இந்தியா ஒளிர்கிறது’ கோஷமாக வெளிப்பட்டது. ஆனால் அந்தக் கோஷம் பாஜகவைக் கரைசேர்க்கவில்லை. அதன் முன்னேற்றத்துக்கு அணை போட்டுவிட்டது.
மாநிலக் கட்சிகளை பாஜக பயன்படுத்தும் முறை
சமீப காலமாக, மாநிலக் கட்சிகளின் பலத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் போக்கைக் கடைப்பிடித்துவருகிறது பாஜக. அந்தந்த மாநிலத்துக்குத் தேவையான அத்தனை வித்தைகளையும் தன்னில் வளர்த்துக்கொண்ட பிறகு, அந்த மாநிலத்தில் ஓரளவேனும் காலூன்றிக்கொண்ட பிறகு, மெதுவாக அந்தக் கட்சிகளை விட்டு விலகிக்கொள்கிறது. இது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டாகத் தோன்றலாம். ஆனால், சந்திரபாபு நாயுடுவும் உத்தவ் தாக்கரேவும் இதைத்தான் சொல்லிவருகின்றனர்.

1999ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி கவிழக் காரணமாக இருந்தார் ஜெயலலிதா. அவரின் முடிவு, பாஜகவை இப்படிப்பட்ட கூட்டணிக் கணக்குகளுக்குள் தள்ளியிருக்கலாம். வெற்றி பெறும் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசில் பதவி வகிக்கும் நேரத்தில், மாநிலத்தில் ஓர் அடி விலகிச் செயல்படுவதும்கூட, இதற்குக் காரணமாக இருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும், கூட்டணி பலமில்லாமல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியைப் பாஜக பெற முடியாது என்பதே உண்மை. குஜராத் சட்டமன்றத் தேர்தல் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல மாநிலங்களில் வலுவான கூட்டணி இல்லாமல் பாஜக வெற்றி பெற இயலாது என்று அரசியல் பண்டிதர்கள் போட்ட கணக்கு பலிக்கவில்லை என்பது உண்மைதான். மோடி மந்திரமும் வளர்ச்சி நாயகன் பிம்பத்துக்கு ஆதரவாக அடித்த அலையும் அதற்குக் காரணமாக அமைந்திருந்தன. பத்தாண்டுக் கால காங்கிரஸ் ஆட்சியின் மீதான அதிருப்தியும் அதற்கு வலு சேர்த்தது. பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்றது. ஆனால், அதிசயங்கள் அரிதாகவே நிகழும் என்பதை மறந்துவிடக் கூடாது. வரும் தேர்தலில் அலை வீசுவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை.
புதிய தலைமையின் கீழ் தேர்தல் களம் காணும் காங்கிரஸ் கட்சி, கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்து, இந்தியாவின் பிற மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டு சேர முடியும். தேசியவாத காங்கிரஸுடனோ, திரிணாமுல் காங்கிரஸுடனோ, ஐக்கிய ஜனதா தளத்துடனோ கூட்டணி சேர முடியும். சிவசேனா, தெலுங்கு தேசம் உட்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் சாத்தியம் காங்கிரஸுக்கு உண்டு. சத்தியமாக, பாஜகவுக்கு அது கிடையாது.
ஆனாலும், எதிரியின் பலத்தைப் பெறும் வாலியைப் போல, நண்பனின் அத்தனை பலங்களையும் தனதாக்கும் சாதுர்யத்தைப் பின்பற்றுகிறது பாஜக. கூட்டணிக் கட்சியின் பலத்தைத் தெரிந்துகொண்டு, கூட்டுறவைக் குலைப்பதிலேயே குறியாக இருக்கிறது.
நாளை, இதே போன்ற முடிவுகள் பீகாரிலும் காஷ்மீரிலும் கூட ஏற்படலாம். அதைச் சாத்தியப்படுத்த, சில தலைவர்களின் உரசல் பேச்சுகள் போதும். அதுவே, கூட்டணிக் கட்சிகள் மீது போதுமான அளவுக்குக் கறையைப் பூசிவிடும். ஒரே தேசம்; ஒரே கட்சி என்று கேட்பதற்கு, மிக நன்றாக இருக்கும். ஆனால் அதன் கீழ் ஜனநாயகம் என்றுமே தழைத்தோங்க முடியாது. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், அறுதிப் பெரும்பான்மையோடு, இந்த தேசம் முழுக்க தன் ஆட்சியை விரவ நினைக்கிறது பாஜக.
‘நீ நெல் கொண்டுவா; நான் உமி கொண்டுவருகிறேன்; நாம் ஊதி ஊதித் தின்னலாம்’ என்பதை, இன்றைய காலத்தில் சிறுபிள்ளைகளே ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், மாநிலக் கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ளும் என பாஜக நம்புகிறதா? சிவசேனாவும் தெலுங்கு தேசமும் பெறப்போகும் வெற்றிகளும் தோல்விகளுமே, இதற்கான சரியான பதிலைத் தரும்.

நன்றி :  www.minnambalam.com

 

No comments: