Feb 12, 2018

மூன்று தற்கொலையாளர்களும் ஒரு தன்னம்பிக்கைக் கதையும்..

தற்கொலை செய்யும் எண்ணம் மனதில் ஆழிப்பேரலையாக உருவெடுக்கும்போது, தன்னம்பிக்கை சிறுதுகளாகிப் போகும்; அந்தக் கணத்தைக் கடந்துவருவதை எந்த வார்த்தைகளாலும் ஈடுகட்ட முடியாது. இதனை மிக அழுத்தமாகச் சொல்லும் படம், 2016ல் மலையாளத்தில் வெளியான ‘கட்டப்பனையில ரித்விக்ரோஷன்’ திரைப்படம். நான் சீரியசாக சொன்னதை, படத்தில் சிரிக்கச் சிரிக்கக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
இயல்பற்றுக் கிடைக்கும் வாழ்க்கை ஒன்றாகத் திரண்டு, உச்சம் நோக்கிச் சென்றால் எப்படியிருக்கும்? இப்படியொரு கனவைத் தன்னுள் கொள்ளாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சாமான்ய வாழ்க்கையைச் சலிப்புடன் நிகழ்த்திக்கொண்டு, அசாதாரணமான கனவுகளைச் சுமப்பதே பலரது வழக்கம். அப்படியொரு மனிதனாகத்தான், இந்த கதையின் நாயகன் கிருஷ்ணன் வருகிறான். 

கதைப்படி தற்கொலைக்கு முயலும் மூன்று நபர்களில், கிருஷ்ணனே பிரதானமானவன். ஆனால், படத்தின் திரைக்கதை ஜியோ என்ற நபரிலிருந்து தொடங்குகிறது. தனது காதலிக்குத் திருமணம் நடப்பதை அறிந்து பதைபதைப்புடன் அவன் வருகிறான். எந்த வசதியுமல்லாத ஜியோவை திருமணம் செய்வதால் என்ன பயன் என்று கேட்கிறாள் அவனது காதலி. அதனால் மனமுடையும் ஜியோ, வழியில் தென்படும் தற்கொலைப்பாறையின் மீதேறுகிறான். கீழே குதிக்க நினைக்கும்போது, தரையில் இருக்கும் காகிதக்கற்றைகள் அவன் கண்ணில்படுகிறது. அது, தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒரு மனிதன் எழுதிய கடிதம். இந்த இடத்தில் இருந்து, கிருஷ்ணனின் அறிமுகம் துவங்குகிறது.
இந்த திரைக்கதை உத்தி தான், கட்டப்பனையில ரித்விக்ரோஷன் படத்திற்கு மேலும் அழகூட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான மலையாளத் திரைப்படங்களில் திலேஷ் போத்தனின் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது. தமிழில் சமீபத்தில் வெளியான நிமிர் திரைப்படம் இதன் மறுஆக்கம் தான். ஆனால், அதைவிட திரைக்கதையில் காட்சிகளை அடுத்தடுத்து கோர்ப்பதில் ஒருபடி முன்னால் நிற்கிறது கட்டப்பனையில் ரித்விக்ரோஷன். 

நீண்டநாள் கழித்து எழுதவேண்டுமென்று ஆசை உந்தியவுடன், ’மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் திரைக்கதையைத்தான் ஒன்லைனராக எழுதிப்பார்த்தேன். அதனைத் திரும்ப வாசிக்கும்போது, எத்தனை கடினமான திரைக்கதையாக்கம் என்று புரிந்தது. அதுவே, கட்டப்பனையில ரித்விக்ரோஷனைப் பார்த்தபோது அமிழ்ந்துபோனது. 
வழக்கமான மசாலா சினிமாவையே அற்புதமான அனுபவமாக மாற்றும் ரசவாதம் இந்தப்படத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், இந்தப்படத்தில் மகேஷ் கதாபாத்திரத்தை ஒரு காட்சியில் ரெபரன்ஸ் செய்கிறார்கள். அந்த அளவுக்கு எள்ளல் தன்மை நிறைந்த வசன நகைச்சுவை படத்தில் உண்டு. சூழலே நகைச்சுவையாக மாறும் காட்சிகளும் உண்டு. அவலமே அங்கதமாக மாறும் அற்புதமும் உண்டு. 


நடிகனாக வேண்டுமென்ற கனவைப் பறிகொடுத்த தந்தைக்கு மகனாகப் பிறந்த ஒருவன், தற்செயலாக அதே கனவைத் தனக்கானதாக மாற்றுகிறான். கருத்த கிருஷ்ணன் என்று தந்தையும் அழைப்பதை நினைத்து தாழ்வுமனப்பான்மை கொள்ளும் ஒருவன், சினிமா நடிகன் என்ற அந்தஸ்தினால் அதனைச் சரிசெய்துவிட முடியுமென்று நம்புகிறான். அவனைப் பகடி செய்யும், சிக்கலில் மாட்டிவிடும் நண்பனொருவன் எப்போதும் உடனிருக்கிறான். அவனை ஒருதலையாகக் காதலிக்கும் பெண்ணொருத்தி பக்கத்து வீட்டில் இருக்கிறாள். அவனது வாழ்க்கையே முக்கியம் என்று நினைக்கும் தந்தை வீட்டில் இருக்கிறார்.
இத்தனையும் இருந்தும் சினிமா நாயகனாக வேண்டுமென்ற ஆசையும், அழகான பெண் காதலியாக வரவேண்டுமென்ற ஏக்கமும் கிருஷ்ணனை அலைக்கழிக்கிறது. அந்த இரண்டுமே அவனது வாழ்வில் நிகழும் சாத்தியம் உண்டாகிறது. அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.
இதனைப் படித்ததும், நமது மனதில் ஒரு திரைக்கதை கண்டிப்பாக உருவாகும். ஆனால், அது அத்தனையுமே கட்டப்பனையில் ரித்விக்ரோஷன் படத்தில் பொய்த்துப் போகிறது. இத்தனைக்கும் வழக்கமான கமர்ஷியல் படங்களில் வரும் பாத்திரங்கள், காட்சியமைப்புகள், திரைக்கதை போக்குகளே இதிலும் நிரம்பியிருக்கின்றன. ஆனால், திரைக்கதையில் அந்த காட்சிகள் அங்குமிங்கும் கோர்க்கப்பட்டிருக்கின்றன. 

நமது பாஸ்போர்ட் புகைப்படத்தை துண்டுதுண்டாக வெட்டி கொலாஜ் படைத்து, அதனை நாமே பார்த்து அழகாக இருக்கிறது என்று வியந்தால் எப்படியிருக்கும்? இப்படத்தைப் பார்க்கையில் அதுதான் நடக்கிறது.
இந்த திரைக்கதையில் தற்கொலைக்கு முயற்சிக்கும் மூன்றாவது நபராக கிரிதர் என்ற பாத்திரம் வருகிறது. இவரைத் திரையில் காட்டும்போது, இந்த திரைக்கதையில் இவரைக் காட்டுவது ஏன் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அதற்கேற்றாற்போல, அந்த பாத்திரத்துக்கான முக்கியத்துவம் படம் நெடுகிலும் கொடுக்கப்படுவதில்லை. இறுதியில், அதற்கான பதில் கிடைக்கிறது. 
ஒரு மலையுச்சியில் தற்கொலை செய்ய அடுத்தடுத்து வரும் மூன்று மனிதர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதே படத்தின் முடிவு. மற்ற இரு பாத்திரங்களின் மனநிலையும், அவர்களது வாழ்க்கைமுறையும் இரண்டொரு காட்சிகளில் திரைக்கதையில் காட்டப்படுகிறது. 
இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் இசை. பாடல்களுக்கான இசையை, இயக்குனர் நாதிர்ஷாவே நிரப்பியிருக்கிறார். பாவனா வழக்கில் நடிகர் திலீப்புடன் இணைந்து கைதானவர்களில் இவரும் ஒருவர் என்பது, இந்த இடத்தில் குறிப்பிடத் தேவையற்ற தகவல். படத்தைத் தயாரித்திருப்பவர் அதே திலீப். பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருப்பவர் பிஜிபால். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களூம் தங்களது பங்களிப்பைச் சரியாக நல்கியிருக்கிறார்கள். 
நாயகனாக வரும் விஷ்ணு உன்னிமுகுந்தனும் அவரது நண்பராக வரும் தர்மஜன் போல்கட்டியும், இயல்பான கேரள மைந்தர்களை நம் கண்ணில் காட்டுகிறார்கள். சித்திக், சலீம்குமார், பிரதீப் கோட்டயம், கலாபவன் சாஜன் என்று தமிழ்சினிமா ஆர்வலர்கள் அறிந்த சில நடிகர்களும் படத்தில் உண்டு. 

பிரேம்நசீரும் சத்யனும் கோலோச்சிய காலத்தில், மலையாள சினிமாவில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியவர் நடிகர் ஜெயன். தமிழில், மகேந்திரன் இயக்கத்தில் பூட்டாத பூட்டுக்கள் படத்தில் நடித்தவர். இவருக்கென்று, தனித்த ரசிகர் கூட்டம் கேரளாவில் இப்போதும் உண்டு. பெல்பாட்டம் பேண்ட்களும் பிகினிகளும் சன்கிளாஸ்களும் நிறைந்த 80களின் கமர்ஷியல் சினிமா ட்ரெண்டை, மலையாளத்தில் பிரபலப்படுத்தியவர் ஜெயன். சோழவரத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்தவர். இவரது ரசிகராக வருகிறார் நடிகர் சித்திக். 
அந்த காட்சிகளின் முக்கியத்துவம் அறிய, கண்டிப்பாக நாம் கேரள சேட்டன், சேச்சியாகத்தான் பிறந்திருக்க வேண்டும். தனக்கு அழகான மகனைப் பெற்றுத்தர வேண்டுமென்பதற்காகவே, ஜெயன் கெட்டப்பில் சித்திக் பெண் பார்க்கச் செல்லும் காட்சி அதற்கொரு உதாரணம். பெண்ணின் பெயர் சீமா என்று தெரிந்ததும், அவர் காட்டும் முகபாவனை ஒன்று போதும். சீமாவும் ஜெயனும் பல படங்களில் ஒன்றாக நடித்த நட்சத்திர ஜோடிகள் என்பது இதன் பின்னிருக்கும் தகவல். இப்படிப் படம் நெடுக, சின்னச்சின்ன விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. 
நம்மை நேசிக்கும் நபர்களை விட, நம் மனதை ஆக்கிரமிக்கும் கவலைகள் பெரிதா என்ற கேள்வியை எழுப்புகிறது இப்படம். படத்தின் முடிவில் நாயகன் பெரிய நட்சத்திரமாக மாறவில்லை; வழக்கம்போல, தான் காதலித்த அழகான பெண்ணை விட்டுவிட்டு, தன்னை நேசிக்கும் பக்கத்துவீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். படத்தில் எந்தப் புதுமையுமில்லை; ஆனால், கண்டிப்பாக உங்களை ரசிக்க வைக்கும் இந்த கட்டப்பனையில ரித்விக் ரோஷன். 
ஒரு படத்தில் கிருஷ்ணன் ஏற்று நடித்த வேடமே, அடுத்தடுத்த படங்களிலும் அவனுக்குக் கிடைப்பது போன்று இதன் திரைக்கதையில் காட்டப்பட்டிருக்கும். எந்த மொழி சினிமாவானாலும், சினிமாவில் இதுபோன்ற க்ளிஷேக்கள் சர்வ சாதாரணம். ஆனால், அந்த க்ளிஷேக்களை வைத்துக்கொண்டே ஒரு கிளாசிக்கைப் படைக்க முடியுமா? முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் ‘கட்டப்பனையில் ரித்விக்ரோஷன்’. 
இந்தப்படத்தில் சிரிக்க, அழ, குதூகலிக்க, பெருமைகொள்ள, நெகிழ்ச்சியடைய எத்தனையோ அம்சங்கள் இருக்கின்றன. 

சாமான்யர்களுக்கு எப்போதுமே சரித்திர நாயகர்களாக வேண்டுமென்ற ஆசை இருக்கும். சிலர் அதற்கான முயற்சியை மேற்கொள்வார்கள்; வெகு சிலர் அந்தப் பயணத்தைத் தொடர்வார்கள்; அவர்களில் ஒரு சிலருக்கே வெற்றி கிடைக்கும். அப்படியென்றால், மற்றவர்கள் எல்லாம் எந்த கனவுகளும் இல்லாமல் வாழ வேண்டுமென்று அர்த்தமா? இல்லை, இதற்கான பதிலை இந்தப் படம் தருகிறது. 
அதனால் தானோ என்னவோ, இந்தப்படத்தைத் தமிழில் தயாரிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார் நடிகர் தனுஷ். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தீனா, இதில் நாயகனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கண்டிப்பாக, அவர் இந்தப் படத்தில் ஹிட்டடிப்பார். ஆனால், இவரது நண்பராக வரும் பாத்திரத்தை யார் ஏற்கப்போகிறார்கள் என்பதே எனது எதிர்பார்ப்பு. இதுதவிர, படத்தில் வரும் மற்ற பாத்திரங்களுக்கும் தகுந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பது நிச்சயம் குதிரைக்கொம்புதான். தனுஷ், கண்டிப்பாக சாத்தியப்படுத்துவார். 
உண்மையைச் சொன்னால், தமிழ் சினிமாவின் ரியல் ‘கட்டப்பனையில ரித்விக்ரோஷன்’ அவர்தான். கண்டிப்பாக, இது வஞ்சப்புகழ்ச்சி அல்ல; ஒருவேளை அவர் இதைப் படித்தால் புன்னகைக்கக்கூடும்!

No comments: