Mar 10, 2014

ரெண்டாவது இன்னிங்ஸ் - 5


ரன்பீர்கபூர்இவனை மாதிரி ஒரு ஆள் கிடைச்சா போதும், சினிமா ஹீரோக்களைப் பார்த்து, கன்னிப்பெண்கள் சொல்லும் இந்த டயலாக்கை, உலகம் சினிமா தோன்றிய காலம் தொட்டு கேட்டு வருகிறது. திரையில் பளிச்செனத் தோன்றும் மனம் கவர்ந்த அழகனாக, தான் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகைகளின் உள்ளம் கவர் கள்வனாக, படம் முடிந்தபின்னும் நமது ரகசிய சினேகிதனாக இருக்கும் தகுதியை அடைபவர்கள் மிகச்சிலரே. இன்றைய தேதியில், இந்திய சினிமாவில் அப்படிப்பட்ட தகுதிக்கு உரியவராக, தன்னை வளர்த்துக் கொண்ட நட்சத்திரங்களில் முதன்மையானவர் ரன்பீர்கபூர். ரசிகைகளின் கொஞ்சல்மொழியில் சுருக்கமாகச் சொல்வதனால், ஆர்கே.

ஆர்கே என்ற பெயர், இந்தி சினிமாவில் வெகு பிரபலம். அந்தப் பெயருக்குச் சொந்தக்காரர், 50 ஆண்டுகளுக்கு முன்னால், நடிகராகவும் இயக்குனராகவும் புகழ்பெற்ற ஆர்கே என்ற ராஜ்கபூர். அவரும் காதல் மன்னனாகத் திரையில் வலம் வந்தவர்தான். அவருக்கும் ரன்பீருக்கும் உள்ள தொடர்புச் சங்கிலி தாத்தா- பேரன் உறவு. ராஜ்கபூர் பேரனா? ஓ, ரிஷிகபூர்- நீத்துசிங் பிள்ளையா? அப்ப பின்ன என்னங்க.. சினிமா பேமிலில இருக்கிறவரு, அப்போ இப்படி சீக்கிரமா வளர்றது நியாயம்தானே..- இப்படி ரன்பீரின் வளர்ச்சிக்குப் பல காரணங்களைச் சொல்லி, நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்தவர், புகழ் ஏணியில் ஏறுவது பெரிய விஷயம் கிடையாதே? இந்தக் கேள்வி நம் எல்லாரது மனதிலும் எழுவதுதான். ஆனால், அதிகப்படியான நேர்மறை தகுதிகளே, சில நேரங்களில் எதிர்மறையாக உருமாறி நம் வாழ்வைத் திணறடிக்கும். பிரபலங்களின் வாரிசுகளாக அவதரித்தவர்களுக்கு, இந்த கஷ்டம் உடனடியாகப் புரியும்.

அறிமுகமாகும்போதே உண்டாக்கப்படும் இந்த எதிர்பார்ப்பை சரியாகப் பூர்த்தி செய்து, சொல்லப்போனால் அந்த எதிர்பார்ப்பிற்கும் அதிகமாக தன் திறமையை வளர்த்தெடுத்த ரன்பீரின் திரையுலக வெற்றிகளைத்தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.


இன்று ஹிந்தி திரைப்படங்களில் நாம் பார்த்து ரசிக்கும் கான்களின் கலவை ரன்பீர் என்று சொன்னால், கொஞ்சம் அதிகப்படியாகச் சொல்வதுபோலத் தோன்றலாம். ஆனால், அதுதான் உண்மை. ஷாரூக்கான் போல, காதல் காட்சிகளில் உருகி ரசிக மனதை வருடவும் முடியும். அமீர்கான் போல அசத்தலாக நடித்து, நம் கைத்தட்டல்களை வாங்கவும் முடியும். அதே நேரத்தில் சல்மான்கான் போல சட்டையைக் கழற்றி காற்றில் நடக்கவிட்டு, வெற்றுடம்புடன் நடனமாடி, நம்மைச் சுண்டியிழுக்கவும் முடியும். இதுதான் ரன்பீர்கபூர். இந்த வசீகரம் இவரிடம் குடிகொள்ள என்ன காரணம்? தொடரும் இமாலய வெற்றிகள், இந்த வயதிலேயே இவரைத் தேடி வருவது எதனால்?

மிகவும் எளிமையாகச் சொல்வதனால், சினிமா உலகில் என்ன நடக்கிறது? அடுத்து என்ன நடக்கும் என்பதை மிகச் சரியாக புரிந்து வைத்திருக்கிறார் ரன்பீர். அதனால்தான் திரை விமர்சகர்களின் கணிப்புகளை மீறி, தொடர்ந்து தன் உயரத்தை மேலும் நீட்டித்துக்கொள்ள, இவரால் மட்டும் முடிகிறது.


ரன்பீர்கபூர், எல்லா சினிமா வாரிசுகளையும்போல, சினிமாவுக்காகவே வளர்த்தெடுக்கப்பட்ட இளங்காளை அல்ல. சரியாகச் சொல்வதனால், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சினிமா வாரிசுகள் களம் இறங்குவது போல, அவர் நடிக்கத் தயாராகவில்லை. இங்கு வாரிசுகள் பிறந்தவுடனேயே, அவர்களது நடிப்புலக வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டு விடும். கராத்தே மற்றும் குங்க்பூ கற்றுக்கொள்வது, எல்லாவிதமான நடனவகைகளிலும் குரு வணக்கம் வைப்பது, தன்னுடைய குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றுவது என்று சினிமா வாரிசுகளாகத் தயாராக, இங்கு பல தகுதிகள் உண்டு.

ரன்பீரின் தந்தை ரிஷிகபூர் மேற்கண்ட தகுதிகளோடு வளர்ந்தவர்தான். ராஜ்கபூர் படங்களில் தலைகாட்டி, அதன்பின் டீன்ஏஜ் நட்சத்திரமாக பாபி படத்தில் அறிமுகமானவர். ரன்பீரும் அந்த வழியைப் பின்பற்றி இருக்கலாம். ஆனால் அதனைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, இயக்குனராகும் முயற்சியில் இறங்கினார். பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்ததும் நியுயார்க் லீ ஸ்ட்ராஸ்பெர்க் இன்ஸ்டியூட்டில் மேற்கொண்டு படிக்கப்போனார். வளர்ந்துவரும் இந்திய சினிமாவின் போக்கை உணர்ந்து, மெதேட் ஆக்டிங்கில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பின் இந்தியா வந்தார்.

வந்ததும் தந்தை ரிஷிகபூரிடம் சொல்லி, தான் அறிமுகமாகும் படத்திற்கான பூஜை ஏற்பாட்டைக் கவனிக்கச் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். இதுதான் ரன்பீரின் மாற்றங்களுக்கான இரண்டாவது காரணம்.


நடிகர் அமீர்கான், அவரது குடும்பத் தயாரிப்புகளில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார் என்று திரையுலகில் சொல்வதுண்டு. இப்படித் திரைக்குப் பின்னால் நிற்கும்போது, திரைக்கு முன்னால் நிற்பதற்கான அளவுகோல்களை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். ரன்பீர் இந்த காலகட்டத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், பன்சாலி அப்போது அமிதாப் - ராணிமுகர்ஜியை வைத்து ப்ளாக் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

ரசிகனின் மனம் கவரும் ஷாட் எது? எந்த இடத்தில் எவ்வளவு நடிப்பை வெளிப்படுத்த வேண்டும்? நல்ல ஸ்கிரிப்ட் சிறந்த சினிமாவாக மாறுவதற்கான அடிப்படை என்ன? என்று தெரிந்துகொள்ள இதைவிட அற்புதமான வாய்ப்பு வேறு கிடையாது.  விஷால், ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம்பிரபு என்று நம்மூரில் இந்த பார்முலாவைப் பின்பற்றி, நாயகர்கள் ஆனவர்கள் பலர்.

இந்த பார்முலாவைப் பின்பற்றாமல், 90களில் தாம்தூமென அறிமுகமான  ஹிந்தி திரையுலக வாரிசுகளுக்குக் கிடைத்த வரவேற்பையும் நினைத்துப் பார்க்க வேண்டும். சையீப் அலிகான், பர்தீன்கான், அக்‌ஷய்கன்னா, பாபிதியோல், அபிஷேக்பச்சன் என்று வாரிசு பட்டாளங்கள் நடித்து தள்ளினாலும், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. அல்லது ஒன்றிரண்டு வெற்றிகளைத் தந்துவிட்டு, தேமேவென உட்கார்ந்து விட்டார்கள். அதனால் இப்படிப்பட்ட அனுபவப் படிப்பு தேவையென ரன்பீரின் குடும்பம் நினைத்திருக்கலாம். அல்லது ரன்பீர்கபூர் இதுதான் தனக்கான வழி என்று முடிவு செய்திருக்கலாம். ஆனால், இந்த பார்முலாதான், இன்றைய அவரது வெற்றிகளுக்கு அடிப்படை.


சாவரியா.. இந்த திரைப்படம்தான் ரன்பீர் என்ற அற்புதமான நடிகனை நமக்குத் தந்தது. 2007ம் ஆண்டு வெளிவந்த இந்தப்படத்தில்தான், அனில்கபூர் மகள் சோனம்கபூரும் அறிமுகமானார். அற்புதமான பாடல்கள், நல்ல ஒளிப்பதிவு, வளமான நடிப்பு, இதெற்கெல்லாம் மேலாக சல்மான்கானின் சிறப்புத்தோற்றம் இருந்தபோதிலும், சாவரியா திரைப்படம் வெற்றிபெறவில்லை. ஆனால், ஹிந்தி திரைவிமர்சகர்களில் ஒருவரான தரண் ஆதர்ஷ் ரன்பீரைப் பற்றிய எழுதிய விமர்சக வார்த்தைகள், அவரால் மறக்க முடியாதது.

ரன்பீர், இனிவரும் ஆண்டுகளில் கபூர் குடும்பத்திற்கு புகழ் சேர்க்கப் போகிறவர் இவர்தான். இந்த வார்த்தைகள், காலத்தினால் அழிக்க முடியாததாக மாறி, ரன்பீரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது.


2007 ம் ஆண்டு, ரன்பீர் அறிமுகமான இதே காலகட்டத்தில அறிமுகமான இம்ரான்கான், அப்போது வெற்றிகளோடு வலம்வர ஆரம்பித்திருந்தார். விமர்சகர்கள் இருவரையும் ஒரே தராசின் இரண்டு பக்கங்களிலும் உட்கார வைத்திருந்தனர். ஆனால் அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து, கணிப்புக் கணக்குகளை தவிடுபொடியாக்கினார் ரன்பீர்.


பச்னா ஏக் ஹசீனோ திரைப்படத்தில் மூன்று பெண்களைக் காதலிக்கும் காமுகனாக, ராக்கெட்சிங் படத்தில் முன்னேறத்துடிக்கும் சீக்கிய சேல்ஸ்மேனாக, வேக் அப் சித் படத்தில் சோம்பேறி இளைஞனாக, தொடர்ந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். ராஜ்குமார் சந்தோஷியின் வழக்கமான, ஹிந்தி சினிமா கமர்ஷியல்தனம் நிறைந்த, அஜாப் பிரேம் கி கசாப் கஹானியிலும் நடித்தார். பழமை, புதுமை இரண்டும் கலந்த, எல்லா தரப்பினரையும் ஏதோ ஒரு விதத்தில் திருப்திப்படுத்தும் கதைகளையே தேர்ந்தெடுத்தார் ரன்பீர்கபூர்.

தொடர்ந்து அஞ்சான் அஞ்சானி, ராக்ஸ்டார், பர்பி, ஜவானி ஹை திவானி என்று ரன்பீர்கபூர் நடித்த திரைப்படங்கள் தியேட்டரில் பட்டையைக் கிளப்பியது. விமர்சகர்களின் பாராட்டு மழையும் பொழிந்தது. மெதுமெதுவாக முன்னேறி, கான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாக்ஸ் ஆபிஸ் எல்லைக்குள் காலெடுத்து வைத்திருக்கிறார் ரன்பீர். நூறு கோடி வசூலை எதிர்பார்க்கும் சீனியர்களுக்கு மத்தியில், சர்வ சாதாரணமாக இவரது படங்கள் நூறு கோடியைத் தாண்டி வசூல் செய்கின்றன. அஜய் தேவ்கன், அக்‌ஷய்குமார், சையீப் அலிகான் நடித்த படங்களிலும் வெகு சில மட்டுமே, நூறு கோடி வசூல்சாதனை படைத்திருக்கின்றன.

சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்து தோல்வியைத் தழுவிய இவரது பேஷரம் திரைப்படம் கூட, 70 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. இது படத்தின் பட்ஜெட்டை விட, இரு மடங்கு அதிகமான தொகைதான். எதைத் தொட்டாலும் பொன்னாக மாறும் வரம் கிடைத்தவராக, ரன்பீரைக் கொண்டாடுகிறது ஹிந்தி திரையுலக ஊடகங்கள். ஆனால், அதுவே அவரைப் பற்றி கொளுந்துவிட்டு எரியும் சர்ச்சைகளுக்கும் காரணமாக இருக்கிறது.


ஜோடி சேர்ந்து நடிக்கும் எல்லா நடிகைகளோடும் கிசுகிசுக்கப்படுபவர் ரன்பீர்கபூர். தீபிகா படுகோனேயுடன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்தார். அதன்பின் உறவு முறிந்துவிட்டதாக இருவருமே ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர். கேத்ரினா கைஃபுடன் உல்லாசமாக இருந்தார் என்று கடற்கரையில் இருவரும் குளிக்கத் தயாராகும் காட்சிகளை வெளியிட்டன ஊடகங்கள். மேற்கத்திய நாடுகளில் இந்திய சினிமாவுக்கு மார்க்கெட் ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில், அங்கிருக்கும் பாப்பரஸி கலாச்சாரத்தை நமது நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது இந்திய ஊடக சந்தையின் சாதனை.

கேத்ரினாவுடன் காதல், அவருடன் இப்போது நியுயார்க்கில் இருக்கிறார் ரன்பீர் என்று தொலைக்காட்சிகளில் செய்தி வந்தபோது, பிரியங்கா சோப்ரா செய்த செயல் உண்மையிலேயே வித்தியாசமானது. உண்மைக்கு எத்தனை முகம் உண்டு என்று நம்மை சந்தேகம் கொள்ளச் செய்து. அப்படி என்னதான் செய்தார் பிரியங்கா? ப்ளாட்டில் தன்னுடன் இருந்த ரன்பீருடன் போட்டோ எடுத்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டார் பிரியங்கா. அதோடு, இப்போது நியுயார்க்கில் இல்லை ரன்பீர், என்னோடுதான் இருக்கிறார் என்பதை நம்புங்கள் என்ற குறுஞ்செய்தி வேறு.

இப்போது இத்தனை களேபரங்களையும் மீறி, கேத்ரினா கைஃபை ரன்பீர் திருமணம் செய்வது எப்போது என்று ஆருடங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ரன்பீர் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. அவரது பெற்றோர் இருவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதும், காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும் ரன்பீரின் அமைதிக்குப் பின்னிருக்கும் காரணமாக இருக்கலாம்.

ஒரு படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியைப் பெற, உடன் நடிக்கும் நடிகைகளோடு கிசுகிசுக்கப்படுவது திரையுலக வழக்கம்தான். ஆனால் கிசுகிசுவையும் தாண்டி, தனது வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லி ரசிகர்களை திணறடிக்கும் வேலையைப் பார்க்கிறார் ரன்பீர். சமீபத்தில் வெளிவந்த ஒரு பேட்டியில், 15 வயதில் முதல் காதலியுடன் உடலுறவு கொண்டேன் என்று சொன்னார் ரன்பீர்.


சுதந்திரமாக வளர்க்கப்பட்ட ஒரு இளைஞனின் மனதா? இல்லை, சர்ச்சைகளால் வியாபாரம் வளர்க்கும் சினிமா வியாபாரியின் யுக்தியா? இந்த பேட்டிக்குப் பின்னால் இருக்கும் காரணத்தை இதுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் திரைக்கு முன்னும் பின்னும் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு இதுபோன்ற சர்ச்சைகள் பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதில்லை. ரன்பீரின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய எதிர்பார்ப்புகள், இதனை உறுதிசெய்கிறது.

திரைப்பட விழாக்களில் தவறாமல் இடம்பிடிக்கும் அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் பாம்பே வெல்வெட், வித்தியாசமான களத்தில் உருவாகும் ராய், ராக்ஸ்டார் வெற்றிக்குப் பிறகு இம்தியாஸ் அலியுடன் ஒரு படம் என்று பரபரப்பாகப் போகிறது ரன்பீரின் பொழுதுகள். இதோடு, பர்பி இயக்குனர் அனுராக்பாசுவுடன் இணைந்து தயாரிக்கும் ஜக்கா ஜஸுஸ் என்று இறங்கி அடிக்கிறார். நடித்த 10 படங்களில் பெரிய மார்க்கெட் வேல்யூ தனக்கிருப்பதை நிரூபித்த ரன்பீரைப் பார்த்து, மலைத்து நிற்கிறது திரையுலகம்.

கான்கள், குமார்களைத் தாண்டி, அடுத்த தலைமுறைக்கான நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் ரன்பீர். கிராமத்து கதைக்களன்கள், புதுவித முயற்சிகள், உலக சினிமாவைச் சென்றடைவதற்கான பயணம் என்று அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் இடத்தில் இருக்கிறார்.  இயக்குனராக நினைத்து, நடிகராக வேறொரு சிகரத்தில் கொடி நாட்டியிருக்கிறார்.

கபூர் குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த வேளையில், புதிய தொடக்கம் தந்திருக்கிறார். தொடர்ந்து தயாரிப்பாளர் – இயக்குனராக, தாத்தா, கொள்ளுத்தாத்தா வழியில் வெற்றிக்கொடி நாட்டும் வரம் ரன்பீருக்குக் கிடைக்கக்கூடும். அதற்கான காரணமாக எனக்குத் தெரிவது ஒன்றுதான். அதுவும் ரன்பீர் அளித்த பேட்டியில் ஒளிந்திருக்கிறது.


உதவி இயக்குனராக இருந்த காலத்தில், காலை 4 மணி முதல் 7 மணிவரை அயராது உழைக்க வேண்டியிருக்கும். பெரிய குடும்பத்து பையன் என்று பன்சாலி நினைக்கவில்லை. பெண்ட்டை நிமிர்த்தினார். ஆனால் அவ்வாறு வேலை செய்த ஒவ்வொரு நாளும் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதன்பின் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டேன் என்கிறார் ரன்பீர்.

ஜென் துறவியின் மன நிலை, ரன்பீருக்கு இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஆனால் உழைக்கும் ஒவ்வொரு கணத்திலும் ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை அவருக்குள் இருக்கிறது. நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற புரிதலுடன் ஒவ்வொரு விடியலையும் எதிர்கொள்ளும் தெளிவை, அந்த அனுபவம் மட்டுமே கொடுக்கும். அந்த பக்குவம் வாய்க்கும்போது, நாளை என்பது மற்றுமொரு நாளே!
ரன்பீரைப்போல ரசிகர்களின் மனதில் நிலைக்க வேண்டும் என்று விரும்பும் இளம் திலகங்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது இதுதான்.
நன்றி – nadappu.com
-உதய் பாடகலிங்கம்

uthay.padagalingam@gmail.com
-     

No comments: