Feb 28, 2014

ரெண்டாவது இன்னிங்ஸ் - 4


விஜய் சேதுபதி


எப்படி இப்படி வெரைட்டியா கேரக்டர் பிடிக்கிறார்னு தெரியல. எந்த ஹீரோவும் தொடாத ஏரியாவில் ட்ராவல் பண்றார். சமீபத்தில் வெளிவந்த ஒரு ஹீரோவின் பேட்டியில் இடம்பெற்ற, மற்றொரு ஹீரோவின் வளர்ச்சி பற்றிய வார்த்தைகள் இவை. இதைச் சொன்ன ஹீரோவை நம்மில் ஒருவராக நினைத்துக்கொள்வோம். ஏனென்றால், இந்த வார்த்தைகளுக்கு தன்னைத் தகுதியாக்கிக் கொண்டவர்தான், நாம் பார்க்கப்போகும் நாயகன். அவர், விஜய்சேதுபதி.

யார் இந்த விஜய்சேதுபதி? கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை, சினிமாவில் தனக்கான இடம் கிடைக்காதா என்று நடிப்பை நேசித்த கலைஞர்களில் ஒருவர். நம்மால் இதைவிட நல்ல முயற்சிகளை வெளிப்படுத்த முடியுமே என்று தமிழ் சினிமாக்களைப் பார்த்து ஆதங்கப்பட்ட சினிமா ரசிகர். ஒரு நல்ல சினிமாவையும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனையும் உருவாக்குவது எது என்ற தேடலில், தன்னை தரிசித்துக் கொண்டிருந்தவர். 

ஆனால் எனக்கொரு இடம் வேண்டுமடா என்று தனக்குத்தானே ரசிகர் மன்றங்களை உருவாக்கி, போஸ்டரும் பேனரும் அடித்துக்கொள்ளும் கோடம்பாக்கம் பாய்ஸிடம் இருந்து விஜய்சேதுபதி நிறையவே வித்தியாசப்படுகிறார்.  

என் பயணம் சினிமாவை நோக்கி மட்டும்தான் என்ற தெளிவான பார்வை, விஜய்சேதுபதியிடம் அப்போதும் இருந்தது. இப்போதும் அது தொடர்ந்து வருகிறது. அதனால்தான், தனக்கான வாய்ப்புகள் வந்தபோது, மலை முகட்டில் தாயை இறுகப்பற்றிக் கொள்ளும் குரங்குக் குட்டியின் உறுதியுடன் அதனைப் பயன்படுத்திக் கொண்டார். கதை சொல்லியவர்களிடம் எல்லாம் கால்ஷீட் கொடுத்துவிட்டு, வருவது வரட்டும் என்று அதிர்ஷ்ட லட்சுமியின் நிழலுக்கு அடியில் ஒதுங்கவில்லை. தமிழ் சினிமாவின் கருத்துக்கணிப்பர்கள் (இப்படியும் பெயர் வைப்போமே!) கூறும் கட்டியங்களுக்கும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதில்லை.

அது மட்டுமல்ல, விஜய்சேதுபதியின் நிதானம் நிறைந்த பேட்டிகள், படங்களைத் தேர்வு செய்யும் முறை, மற்றவர்களுக்கு முன்னுரிமை இருக்கும் படங்களிலும் நடிப்பது என்று அவரது ஒவ்வொரு அசைவுக்குப் பின்னிருக்கும் தன்னம்பிக்கையே, அவரைப் பற்றி நாம் தேடித் தெரிந்துகொள்வதற்கான காரணங்கள். இது அவரது சமகால நாயகர்கள் பலரிடம் இல்லாதது.  

விஜய்சேதுபதி இந்த கதாபத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பாரா? பீட்சா படம் பார்க்கும்போது இந்த கேள்வி என்னுள் இருந்தது. ஏனென்றால் அதற்கு முன் அவர் நடித்து வெளிவந்த தென்மேற்குப் பருவக்காற்று படத்தை நான் பார்க்கவில்லை. அது எவ்வளவு பெரிய தவறு என்பது, அதனைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது தெரிந்தது. சரி, விஷயத்திற்கு வருவோம். தனுஷின் ரசிகனாக புதுப்பேட்டை படத்தைப் பலமுறை பார்த்தபோது, அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த விஜய்சேதுபதியைப் பார்த்த ஞாபகம் வந்தது. 

அதன்பின் வெகு நாட்களுக்குப் பிறகு, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அவர் நிற்பது தெரிந்தது. ஒரு படத்தின் நாயகனை, வேறு சில படங்களில் பார்ப்பது பெரிய அதிசயம் அல்ல. விமலும் ஷாமும் விஜய் நடித்த படங்களில் அவருக்குப் பின்னால், அவரது நண்பர்களில் ஒருவராக நின்று கொண்டிருந்தவர்கள்தான். 

பீட்சா படம் சென்னை சத்யம் திரையரங்கில் பார்த்தபோது கிடைத்த அனுபவங்கள் இப்போதும் நினைவில் அப்படியே இருக்கிறது. படம் தங்களைப் பயமுறுத்தவில்லை என்று காட்டுவதற்காக, சில இளைஞர்கள் கத்தியவாறும் சிரித்தவாறும் தங்கள் பயத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் குரலுக்கு நடுவே, ஒரு பெண் மட்டும் டேய் மொக்கையா நடிக்கிறடா.. உன்னையெல்லாம் யார்றா செலக்ட் பண்ணது என்று விதம்விதமாக கத்திக் கொண்டிருந்தார். அந்த மைக்கேல் கதாபாத்திரத்தை சித்தார்த்தோ, ரண்பீர்கபூரோ செய்திருந்தால் அந்தப்பெண் அப்படிக் கத்தியிருக்கமாட்டார் என்பது நிச்சயம். படம் ஓடஓட, இளைஞர்களின் கூச்சலும் அந்தப் பெண்ணின் கருத்துக்கணிப்பும் மெல்ல அடங்கிப்போனது. அந்தப் பெண் பற்றிச் சொல்லக் காரணம் இதுதான். அந்தப்பெண் சொன்ன மொக்கை நடிப்பைத்தான், underrated acting என்று விமர்சகர்கள் பாராட்டித் தள்ளினார்கள். அந்த திரையரங்கில் விஜய்சேதுபதி இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்தேன். அதற்கு சூதுகவ்வும் படம் வெளிவந்தபோது பதில் சொன்னார் விஜய்சேதுபதி. 

“யாருக்கும் தெரியாம லாஸ்ட் சீட்ல உட்கார்ந்து படம் பார்த்துட்டு இருந்தேன். நான் வந்த மொக்க எண்ட்ரிக்கு விசிலடிச்சு கைதட்டுன உடனே ஷாக் ஆயிட்டேன்.. ” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் சேதுபதி. தான் எப்படியிருந்தோம், எப்படியிருக்கிறோம் என்பதை தேவைப்படும் அளவு மட்டுமே சொல்வதுதான் திரையுலக விதிகளுக்கு உட்பட்ட வழக்கம். ஆனால், அந்த எல்லைகளை அனாயாசமாகத் தாண்டும் வித்தை, விஜய்சேதுபதிக்கு வாழ்க்கை கற்றுத்தந்த பாடமாக இருக்கலாம். 

ராஜபாளையம் என்ற சாதாரண தென்னக நகரத்தில் பிறந்து, அப்பாவின் வேலை காரணமாக குடும்பத்தோடு சென்னைக்கு வந்தவர். சாதாரண நடுத்தரக் குடும்பத்து சிறுவனாக சென்னையில் வளர்ந்தவர். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து, சென்னைக்கு வரும் மாணவர்களைவிட, அங்கேயே வளர்பவர்களுக்கு வாழ்க்கை பற்றிய அனுபவம் குறைவாகவே இருக்கும் என்பது பலர் நினைப்பது. முக்கியமாக நான் அப்படி பல நேரங்களில் நினைத்து மொக்கை வாங்கியிருக்கிறேன்.
ஆனால் நமது கணிப்புகளை சரியாக்கி, சந்தோஷப்படுத்தும் பதிலைச் சொல்கிறார் விஜய்சேதுபதி. ’விளையாட்டிலும் ஆடல் பாடலிலும் ஆர்வமில்லாத ஒருவர். கல்லூரி படிக்கும்வரை, தன் எதிர்காலம் என்னவென்பதை உணராதவர். ஒரு கணக்காளராக வாழ்க்கையைத் தொடங்கியவர். எல்லோரையும்போல, திரைகடலோடித் திரவியம் தேட, துபாய் சென்ற தமிழர்’ என்று தன்னைப்பற்றி குறிப்புகள் சொல்கிறார்.  ஆனால் இது எதுவுமே அவரது சினிமாத்தேடலை கிளர்ந்தெழ வைக்கவில்லை.
குடும்ப நிர்ப்பந்தம் காரணமாக, தனக்கான வாழ்க்கை சென்னையில்தான் இருக்கிறது என்று நடிப்புக்கலை பயிலும் கூத்துப்பட்டறையில் கணக்காளராகச் சேர்ந்து, 2003ம் ஆண்டில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார் விஜய்சேதுபதி. இலக்கு எதுவெனத் தெரியாமல் தவித்தவருக்கு, ஒரு புகைப்படக்கலைஞர் அவரது முகம் சினிமாவுக்கானது என்று சொல்ல, அன்றிலிருந்து தடம் மாறுகிறது விஜய்சேதுபதியின் தேடல். கவனிக்கவும், சில அன்றாட நிகழ்வுகள் நம் வாழ்க்கையைத் தடம் புரட்டும். 

அன்று முதல் சினிமாவில் தன் முகம் காட்டுவதை தவமாகக் கொள்கிறார் விஜய்சேதுபதி. தினசரி வாழ்க்கையின் தேவைகள் துரத்த, புதிய திசை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். இது போன்ற சூழ்நிலையில், லட்சிய வெறியுடன் இருப்பவர்களே, சிலகாலம் தங்கள் முயற்சிகளைத் தள்ளிப் போடுவார்கள் அல்லது லட்சியத்தையே மடைமாற்றிக் கொள்வார்கள்.
இந்த நேரத்தில் விஜய்சேதுபதி துணைநடிகராக படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார். கல்லூரி மாணவர்களின் குறும்படங்களில் நடிப்பதை பாக்கியமாகக் கருதுகிறார். வாய்ப்பு தேடும் லட்சிய நடிகர்களுக்கு, இது தண்ணீர் குடிப்பது போன்று தினசரி வழக்கம். ஆனால் இப்படிப்பட்ட லட்சிய வெறியோடு இருந்தபோது, விஜய்சேதுபதிக்கென்று ஒரு குடும்பம் இருந்தது. நல்ல வேலையில் இருந்த கணவன் அதனை விட்டுவிட்டு, சினிமாவுக்காக காத்திருப்பதை ஆதரிக்கும் மனைவி இருந்தார். அவரது குழந்தைகளின் கனவுகள், அவரது கனவுகளோடு போட்டி போட்டுக் கொண்டிருந்தது. 

இந்த நிலையில் அரை டஜன் படங்களில் தலைகாட்டியபிறகு, சுசீந்திரன் மூலமாக சீனுராமசாமியின் அறிமுகம் கிடைக்கிறது. அதன்பின், நாயகனாகும் கனவு நிறைவேறுகிறது. ஒரு கலைஞனுக்கு இருக்கும் ஆகப்பெரிய சிரமமே, இந்த இடைப்பட்ட காலத்தை கடந்து வருவதுதான்.
அதற்கும் பதில் சொல்கிறார் விஜய்சேதுபதி. “தென்மேற்குப் பருவக்காற்று பட வாய்ப்பு மட்டும் வரவில்லையென்றால், ஒரு வருடத்தில் மீண்டும் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் யோசனையில் இருந்தேன்.” இதனைச் சொல்லும்போது, எத்தகைய சூழலில் அவரது குடும்ப நிலை இருந்தது என்பது நம் மனக்கண்ணில் வந்து போகிறது. ஒரு பேட்டியில் விஜய்சேதுபதி சொன்ன உண்மை இது. மற்ற நடிகர்கள் செய்யத் தயங்கும் விஷயங்களில் ஒன்று. இதுபோல, இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் உண்மையைச் சொல்வது. 

சமீபத்தில் தன் ரசிகர்களை, ஒரு பத்திரிகைக்காக சந்தித்தார் விஜய் சேதுபதி. அப்போது ஒரு ரசிகர், “நீங்க ஷூ போடாம, சிம்பிளா ஒரு ரப்பர் செருப்பை போட்டு வந்திருக்கீங்களே? ” என்று கேட்டார். அதற்கு விஜய்சேதுபதி சொன்ன பதில்தான், அவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. “இந்த செருப்பு விலை ரெண்டாயிரம் ரூபாய். அது தெரியாம சொல்றீங்களே. இப்படித்தான் சிம்பிள்னா என்னன்னு தெரியாம எதையாவது கேக்குறீங்க.. ” இது மாதிரி பதிலை, மக்கள் அதிகம் பார்க்காத புத்திசாலிகளின் சினிமாவைச் சேர்ந்தவர்கள் சொல்வது வழக்கம். அவர்கள் சொல்வதைக் கேட்கவும் நம்மில் பெரும்பான்மை செவி சாய்ப்பதில்லை.

ஆனால் இப்படிப்பட்ட சின்னச்சின்ன பதில்கள்தான், விஜய்சேதுபதியை பரவலாக எல்லோரிடமும் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. புதிய ரசிகர்களிடம் அவரை அறிமுகப்படுத்துகிறது. இந்த வெளிப்படையான தன்மையும் யதார்த்தமும் அவரது உத்திகளில் ஒன்றாகவும் இருக்கலாம். ஆனால், சக நடிகர்கள் இப்படிப்பட்ட உத்திகளுக்கு என்றுமே தயாராக இருந்த்தில்லை என்பது தமிழ்சினிமா கண்ட நிதர்சனம். இதுதான் இன்றைய தலைமுறை நடிகர்களில் விஜய்சேதுபதிக்கு தனித்த அடையாளத்தை தந்திருக்கிறது. 


இன்று குறும்பட இயக்குனர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதற்கு முக்கியக் காரணம் விஜய்சேதுபதி. தான் நடித்த குறும்படங்களின் இயக்குனர்கள் படம் இயக்கியபோது, அதில் நாயகனாக நடிக்கத் தயாராக இருந்தவர் இவர். மற்றவர்கள் தயங்கும்போது, தைரியமாக அதில் இறங்க சிலரே தயாராக இருப்பார்கள். அந்த குணமே அவர்களை நமக்கு அடையாளம் காட்டும். அந்த வகையில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என்று விஜய்சேதுபதி தொட்ட அனைத்தும் வெற்றிகள். 

வளர்ந்துவரும் நடிகனாக அரை டஜன் படங்களில் நடிக்க முயற்சிக்கும் ஒருவருக்கு, இதுபோன்ற வெற்றிகள் தடைக்கல்லாகவும் அமையும். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற பயத்தைத் தரும். ஏனென்றால் சினிமாவில் வெற்றிகள் என்பது மாயமான் போல. தொடர்ச்சியான வெற்றிகள் மட்டுமே, நம்மைக் கொண்டாட வைக்கும். 

இதனை முழுமையாக உணர்ந்த விஜய்சேதுபதி, இந்த காலகட்டத்தில் தனது அடுத்தகட்ட முயற்சிகளை வேறு திசை நோக்கி செலுத்த ஆரம்பிக்கிறார். சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக நடிக்கிறார். ரம்மி படத்தில் இனிகோ பிரபாகரின் நண்பனாக நடிக்கிறார். அந்தப் படங்களில் நடிப்பதினால், தன்னுடைய நாயக அந்தஸ்து பறிபோகும் என்ற பயம் விஜய்யிடம் இல்லை. அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறு, அந்தப் படங்களும் விஜய்சேதுபதியை வேறொரு தளத்தில் அறிமுகப்படுத்துகிறது.
அதனைத் தொடர்ந்து, மூன்று வெவ்வேறு கதைகள் சொல்லும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்து, அதன் வெற்றிக்கு அடித்தளமாக மாறுகிறார். 

இதனைத் தொடர்ந்து, ஆர்யாவுடன் புறம்போக்கு, விஷ்ணுவுடன் இடம்பொருள் ஏவல், தனுஷூடன் ஒரு படம் என்று மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கத் தயாராக இருக்கிறார். ஒரு விதத்தில் நிறம் மாறும் தமிழ்சினிமாவின் போக்கை, விஜய்சேதுபதி சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. 

மெல்லிசை, சங்குதேவன், வன்மம் என்று விஜய்சேதுபதி நடிக்கும் படங்களின் பட்டியல் நம்மை மிரள வைக்கிறது. அதே நேரத்தில் கன்னபின்னாவென்று நடித்து காணாமல் போய்விடுவாரோ என்று நமக்கும் அவரைப்பற்றி பயம் வருகிறது.

இன்னொரு திசையில், சிவகார்த்திகேயன்தான் உங்களது போட்டியா? என்று சினிமா பத்திரிகை அன்பர்கள் சிக்கிமுக்கி கேள்விகளால் உரசும்போது, மென்மையாகப் பதில் சொல்கிறார். கதையின் நாயகன் மட்டுமே என்று பதில் சொல்லி, தன்னை நம்பி வரும் ரசிகர்களை மிரளவிடாமல் பார்த்துக் கொள்கிறார். 


இந்த இரண்டு வருடங்களில் விஜய்சேதுபதிக்கான எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் அதிகமாகி, இப்போது அந்தரத்தில் நிற்கிறது. அடுத்துவரும் படங்களில், அவர் தன்னை நிரூபிக்கக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். இது அவருக்கு மட்டுமல்ல, அவரோடு பயணிக்கப்போகும் மற்ற நடிகர்களின் நிலையும் இதுதான்.
அப்போது விஜய்சேதுபதியை நோக்கி, தோல்விகளும் வரலாம். தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நடிப்பதற்கு முன்பு, அவர் கண்ட தோல்விகள் வானிலை அறிவிப்புக்கு உட்படாத புயல்கள் தான். அதனைக் கடந்து வந்தவரை, இனி வரப்போகும் சூறாவளிகளும் சுழல்காற்றும் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. அதுபோல, மிகப்பெரிய வெற்றிகளும் சினிமாவையும் ரசிகர்களையும் பற்றிய அவரது அடிப்படை நம்பிக்கையை என்றும் தகர்க்காது.
ஆதலால் விஜய்சேதுபதிக்கு சொல்லிக் கொள்வது இதுதான். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தின் ஓட்டத்தோடு ஓடுபவர் நீங்கள். எங்கள் மனத்தில் என்றும் நிலைத்திருக்க, இதே வேகத்தோடு நீங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாலே போதும்.. வேறென்ன சொல்ல.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..
-உதய் பாடகலிங்கம்
uthay.padagalingam@gmail.com

No comments: