Feb 27, 2014

ரெண்டாவது இன்னிங்ஸ் - 3


 சையீப் அலிகான்

“பார்க்க ஒரு மா‌தி‌ரி இருக்காப்ல.. ஹீரோவா?” நண்பர் ஒருவர் கேட்டபோது, என்ன சொல்வதென்று தெரியவில்லை. “உண்மையா சொல்றீங்க? இவரு நேஷனல் அவார்டு  வேற வாங்கி இருக்காரா?” மீண்டும் ஆச்சரியத்துடன்  கேட்டார் நண்பர். அவரிடம் நான் காண்பித்தது நடிகர் சையீப் அலிகானி ன் சிறு வயது புகைப்படம்.

அவரது முகக்குறிப்புகள் எனது கணிப்பு தவறா? என்று கேட்பது போலிருந்தது. அவரைக் குற்றம் சொல்ல முடியாது. பார்த்தவுடன் முடிவெடுத்து, சாமுத்திரிகா லட்சணம் போல, குணாதிசயம் சொல்லும் இந்திய மனது அவருக்குள் குடிகொண்டிருந்தது. சையீப் நடித்த பீயிங் சைரஸ் படத்தை பார்க்கக் சொன்னபோது, நடந்த சம்பவம் இது. இப்படியொரு மனவோட்டத்துடன், ஒரு ஹீரோவை சாதாரண ரசிகனால் மானசீகமாக ஆராதிக்க முடியுமா?
இது தான் சைய்யீப்பின் வாழ்க்கையை நோக்கி என்னை நகர்த்தியது. நண்பர் கேட்ட மாதிரி, எந்த தைரியத்தில் இவர் நடிக்க வந்திருப்பார்? இதுபோன்ற வார்த்தைகளுக்கு சைய்யீப் என்ன ரியாக்ஷன் கொடுத்திருப்பார்? இந்த வார்த்தைகளைப் பொய்யாக்க, அவர் மனதுக்குள் எத்தனை பெரிய போராட்டம் நடந்திருக்கும். இறுதியில் சரியான பாதை நோக்கி, அவரைச் செலுத்தியது எது?

நான் சொல்ல வந்தது உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். ‘பெண் தன்மையுடன் இருக்கும் இவருக்கு ஹீரோ ஆசை எதற்கு?’ என்று ஹிந்தி சினிமா பத்திரிகைகள் இவரது அறிமுகத்தை கிண்டல் அடித்தன. அதற்காகவே, ஆரம்ப காலத்தில் சைய்யீப்பின் போட்டோஷூட்களில் சவரம் செய்யும் தோற்றம் தவறாமல் இடம்பிடித்தது.

ஆனால் இதெல்லாம் ஆண்களின் பார்வைதான். சில பெண்களுக்கு சையீப்பின் இந்த தோற்றம் வெகுவாகப் பிடித்திருக்கிறது. “இப்படிப்பட்ட தோற்றம் கொண்டவர்கள்தான், பிற்காலத்தில் காதல் மன்னனாக ஜொலிப்பார்கள். இங்கேயும் அதற்கு உதாரணங்கள் உண்டு” என்று காதல் நாயகர்களின் பரிணாம வளர்ச்சியை ஒரு பெண் தோழி விளக்கியபோது, என்னிடத்தில் பதில் ஏதும் இல்லை.
‘பெண் தன்மையுடன் நீங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, சைய்யீப் சொன்ன பதில் இதுதான். “ஆம். என்னிடம் அம்மாவின் சாயல் அதிகமாக உண்டு” எத்தனை அர்த்தமுள்ள பதில்..


உலகின் தலை சிறந்த ஆண்மகன் தான் மட்டும்தான் என்று எண்ணிக்கொண்டு, தங்கள் மதிப்பீடுகளுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு, உலகை எடை போடும் உலக மகா ஆம்பளைங்களுக்கு இந்த வார்த்தைகள் அர்த்தமற்றவைதான்.
இப்படியான கேள்விகள் மட்டும்தான், சைய்யீப்பின் கடந்த கால வாழ்க்கையில் இருக்கும் விமர்சனங்களை நினைவுபடுத்துகின்றன. ஆனால், அவரைக் குறை சொன்னவர்கள் வியக்கும் அளவிற்கு ஏகபோகமாக மாறியிருக்கிறது சைய்யீப்பின் வாழ்க்கை.
முன்பு இவரைக் குறை சொன்னவர்கள், இப்போது இவர் அணியும் நாயக பிம்பத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். அந்த முகமூடியை விரும்பி அணிகிறார்கள். இதற்குக் காரணம், சைய்யீப் தற்போது நடித்து வரும் கதாபாத்திரங்கள்.
ரேஸ், ஓம்காரா, லவ் ஆஜ் கல், குர்பான், த ஷான் போன்ற படங்கள், சைய்யீப்பின் ஆண்மை தோற்றத்தை ரசிகர்களின் மனத்தில் உறைய வைத்த படங்கள்.


இந்த படங்களில் நடிப்பதற்கு முன்பு, சைய்யீப் எத்தனை தடவை தன் மீதான விமர்சனம் பற்றி, யோசித்திருப்பார். அம்மா சர்மிளா தாகூர் புகழ்பெற்ற நடிகை. அப்பா மன்சூர் அலிகான் பட்டோடி கிரிக்கெட் வீரர். அப்படி இருந்தும், இந்த விமர்சனங்களை, புகழ் வார்த்தையாக மாற்ற, என்னென்ன செய்திருக்க வேண்டும்.
முடியும் என்று தன்னம்பிக்கையுடன் சையீப் தன் மனத்துக்குள் சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான், சையீப்பினால் பெண்களை வசியப்படுத்தும் ஜேம்ஸ்பாண்ட் தனமான ஏஜெண்ட் வினோத் பாத்திரத்தில் தைரியமாக நடிக்க முடிந்தது. சையீப்புக்கு மட்டுமல்ல, அவரைப் போன்று தோற்றமளிக்கும் எல்லா ஆண்களுக்கும் இது போன்ற சில தடைகள் உண்டு.
ஆனால், இதெற்கெல்லாம் ஆரம்பமாக இருந்தது தில் சாஹ்தா ஹை திரைப்படம்.


2001ல் வெளிவந்த இந்த படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக, சமீர் என்ற பாத்திரத்தில் நடித்தார். அதற்கு முன்பு, எத்தனையோ படங்களில் சையீப் நடித்தாலும், சினிமா ரசிகர்களைப் பொருத்தவரை, அவரது அடையாளத்தை துல்லியமாகக் காட்டிய படம் இதுதான். தில் சாஹ்தா ஹை திரைப்படத்திற்கு முன், பின் என்று ஹிந்தி திரைப்படங்களைப் பிரிக்கும் அளவிற்கு முக்கியமான திரைப்படம்.
இந்த படத்தில் பார்த்த பெண்களிடம் எல்லாம், காதலை எதிர்பார்க்கும் வேடத்தில் சிறப்பாக நடித்தார் சையீப். இந்த திரைப்படத்திற்கு முன்பும், மற்ற நடிகர்களோடு நடித்து, வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறார். இருந்தாலும், தில் சாஹ்தா ஹை திரைப்படம், அவரது நடிப்பு வாழ்க்கையில் புதிய திருப்பத்தை உண்டாக்கியது.

அதன்பின், மின்னலே படத்தில் அப்பாஸ் நடித்த பாத்திரத்தை, ஹிந்தியில் நடித்தது சையீப். மாதவன் என்ற தமிழ் நடிகர் அறிமுகமாகும் படத்தில் இவர் நடித்ததே ஒரு மாற்றம் தான்.

2003ல் மீண்டும் ஒரு மாற்றம். இந்தமுறை ஷாரூக் மற்றும் ப்ரித்தீ ஜிந்தாவுடன் இணைந்து கல் ஹோ நா ஹோ என்ற படத்தில் நடித்தது பெரும் ரசிகர்களை சென்றடைந்தது. அதோடு, நாயகியோடு மட்டும் இணைத்து கெமிட்ஸ்ரி என்ற வார்த்தையை உபயோகித்து வந்த பத்திரிகை உலகம், இரு நாயகர்களின் கெமிட்ஸ்ரி நன்றாக இருந்ததாக எழுத ஆரம்பித்தது. அதுவே, ஷாரூக் மற்றும் சையீபை சிறந்த விழா தொகுப்பாளர்களாக மாற்றக் காரணமானது.

ஏக் ஹாசினா தீ.. இந்த திரைப்படத்தில் இருந்து தான், நான் சையீப்பின் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தேன். தன்னை காதலிக்கும் பெண்ணை, சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைக்கும் காமுகனாக அசதி இருப்பார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 22 பீமேல் கோட்டயம், இந்த திரைப்படத்தின் மையக்கருத்தை தழுவியிருக்கும். ஒரு நடிகன் நாயகனாக நடிக்காவிட்டாலும், பெண் ரசிகைகள் ரசிப்பார்கள் என்று நிரூபித்த படம் இது.
அதன்பின், சையீப் நடித்த ஹம்தும் திரைப்படம், அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து, நல்ல குணமுள்ள பெரிய குடும்பத்து வாரிசாக(பரிநீதா), பார்ஸி இளைஞனாக (பீயிங் சைரஸ்), வெறிப்பிடித்த அடியாலாக ளா (ஓம்காரா), ராஜாவம்சத்து இளவரசனாக (ஏகலவ்யா) என்று ஒவ்வொரு படத்திலும் தூள் கிளப்பினார் சையீப் அலிகான்.

இன்று சையீப் நடிக்கும் படம் என்றாலே, வித்தியாசமானதாக இருக்கும் என்ற சிந்தனை மக்களிடம் பரவி யிருக்கிறது. அதற்கு தகுந்தவாறு, ரேஸ்2, காக் டெயில், ஆரக்ஷன், கோ கோவா கோன் என்று ஒவ்வொரு படமும் வெளியாகி வருகிறது. இந்த படங்களின் வெற்றி, தோல்விகளைப் பற்றி, சைய்யீப் கவலைப்படுவதில்லை. இத்தனைக்கும் இவர் சில படங்களைத் தயாரித்து நடித்துள்ளார்.

குடும்ப வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள், அடிக்கடி தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது, முரட்டுத்தனமாக சக மனிதர்களை எதிர்க்கொள்வது என்று சினிமாவுக்கு வெளியே இருக்கும் வாழ்க்கையிலும் நிறைய பிரச்சினைகள். இதனைமீறி, சையீபை இயங்க வைப்பது அவரைச் சுற்றியிருக்கும் விமர்சனங்கள்தான். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக இருப்பதும் கேலிக்கணைகள் தான்.
இரண்டாவது மனைவி கரினா வுடன் வாழ்க்கை, 750 கோடி ரூபாய் சொத்துக்கள் உடையவர், பொது இடத்தில் தகராறு என்று தினமும் ஒரு செய்தி இவரைப் பற்றி வந்து கொண்டிருக்கிறது. இதனைப் படிப்பவர்கள், சையீப்பின் வாழ்க்கையை, அக்குவேறு ஆணிவேராக, டீக்கடைகளில் உட்கார்ந்து கொண்டு, பிரித்து மேயலாம். இது சையீப்புக்கும் தெரிந்திருக்கும். வெற்றிகரமான படங்களைத் தேர்வு செய்வது போல, இப்படிப்பட்ட எதிர்வினைகளையும் சிரித்தவாறே எதிர்கொள்கிறார். தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.


திரையுலகில் நுழைந்தது முதல் இன்றுவரை, விதம்விதமான செய்திகளை எதிர்கொண்டு வரும் ஒரு நட்சத்திரத்திற்கு, மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் கண்டிப்பாக  இருக்காது தான்.
சையீப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து கவனித்து வருபவராக நீங்கள் இருந்தால், இன்றைய அவரது வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம். இது சையீப்புக்கு மட்டும் பொருத்தமானதல்ல. அவரைப் போன்று, மோசமான எதிர்வினைகளுக்கு ஆளாகி, துவண்டு விடாமல் இலக்கை நோக்கிப் போகும் எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தும்.

இது என் வாழ்க்கை என்று தொடர்ந்து பயணிக்கும் சையீப் அலிகான் போன்றவர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம்.
நம்மைப் பற்றி பேசாமல் புறக்கணிப்பதை விட, ஏதாவது பேசிக்கொண்டிருப்பது மிகவும் நல்லது. அப்போதுதான் பேசும் வார்த்தைகளுக்கு தாமே எதிர்வினையாற்றி, நமது வளர்ச்சியை நமக்கே புரிய வைப்பார்கள்.

குறிப்பு : வெற்றி வெறும் கனியல்ல என்ற பெயரில் இது நடப்பு.காமில் வெளிவருகிறது.

நன்றி – நடப்பு.காம்
-உதய் பாடகலிங்கம்
uthay.padagalingam@gmail.com


No comments: