Feb 27, 2014

ரெண்டாவது இன்னிங்ஸ் - 2


சமுத்திரக்கனி

“திரும்பவும் முதல்ல இருந்தா.. சியர்ஸ்..”
நான்கு குடிகார குடிமகன்களிடம் மாட்டிக்கொண்ட சூழ்நிலையில், தன்னைத் தானே நொந்துகொண்டவாறு, வடிவேலு சொல்லும் வசனம் இது. வடிவேலுவின் திறமையான நடிப்பினால், அந்த காட்சியை பார்த்து ரசித்து சிரித்திருப்போம்.
ஆனால், தொடங்கிய இடத்திலேயே மீண்டும் மீண்டும் வந்து நிற்கும் சுழலுக்குள் நாம் அகப்பட்டிருந்தால்.. நம்மில் அநேகம் பேர், இந்த வார்த்தைகளை உச்சரித்தவாறு, வாழ்க்கையின் விளிம்புக்கோடு வரை சென்று, யாருமே தேற்ற முடியாதவாறு அழுது கொண்டிருந்திருப்போம்.
வாழ்க்கைப் போராட்டத்தில் மீண்டும் மீண்டும் விழுந்து எழுவது, உழைப்பில் நம்பிக்கை கொண்ட எவருக்கும் பொழுது புலர்வது போலத்தான்..
உழைப்புக்கும் உயர்வுக்கும் பூர்வஜென்ம பந்தம் மட்டுமே உண்டு என்றெண்ணும் சினிமா உலகத்தில், இந்த நம்பிக்கையுடன் இன்றும் உயிர்ப்புடன் இயங்கிவரும் ஒரு சிலரில் ஒருவர் சமுத்திரக்கனி..


நாடோடிகள் படம்தான், ரசிகனுக்கும் இவருக்குமான அறிமுகத்தை தந்தது. ஆனால், அதற்கு முன்பான சமுத்திரக்கனியின் வாழ்க்கை, இப்போது விற்பனையில் முன்னிலை வகிக்கும் எத்தனையோ சுயசரிதைகளுக்கு சவால் விடும் சம்பவங்கள் நிறைந்தது.


“வேணாம். மாட்டிக்காத, அப்புறம் அந்த உலகத்துல இருந்து வெளிவரவே முடியாது”, சின்னத்திரை உலகத்தை நோக்கி பார்வையைத் திருப்பும் உதவி இயக்குநர்களிடம் அவர்களுக்கு முந்தைய தலைமுறை சொல்லும் வார்த்தை இது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த வார்த்தைகளை வெகு ஸாதாரணமாக, தமிழ் சினிமா உலகத்தில் கேட்கலாம். அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன், எப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டவரின் கால்களும், செல்லும் திசையில் தடுமாறத் தொடங்கும்.
ஆனால், எனக்கு எது சரி என்று படுகிறதோ, என் வாழ்க்கைக்கு எது உதவுகிறதோ, அதை நான் தேர்ந்தெடுக்கிறேன் என்று, கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திய துணிச்சல்தான், இயக்குனர் சமுத்திரக்கனியின் அடையாளம். என் பெயரை போலவே நானும் தனித்தன்மை வாய்ந்தவன்தான் என்று சமுத்திரக்கனி நிமிர்ந்து நிற்கும் கணங்களுக்கு பின்னால் உள்ள வாழ்வை பற்றி மட்டுமே, இனி தொடர்ந்து பார்க்கப் போகிறோம்.
நாடோடிகள் படத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், மனநலக் காப்பகத்தில் இருந்து தப்பித்து வந்த இரண்டு பேர், சென்னை நகரத்தில் நுழைவார்கள். இங்கு எப்படி வாழ்வது என்ற கேள்வியுடன் சென்னைக்கு வந்த என் போன்ற சாதாரண மனிதர்களுக்கு, அசாதாரண நம்பிக்கை தந்த காட்சி அது. விக்ரமன் படத்தில் வருவது போல, இந்த காட்சிகளை வெகு எளிதாக லொள்ளுசபா காமெடியாக மாற்ற முடியாது. ஏனென்றால் அதற்கு பின்னால் இருப்பது, சமுத்திரக்கனி அறிந்த, பார்த்த, அனுபவித்த அனுபவங்கள்.. 
அலைகள் ஓய்வதில்லை பார்த்துவிட்டு, அடுத்த பாரதிராஜா ஆகவேண்டும் என்று நினைத்த எத்தனையோ உதவி இயக்குனர்களில் ஒருவராகத் தொடங்கியது சமுத்திரக்கனியின் அத்தியாயம். வீட்டில் பணம் திருடி, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து, சென்னைக்கு வந்து வந்து ஊர் திரும்ப்பிய அனுபவமும் இவருக்கு உண்டு. யாருடைய உதவியும் இல்லாமல், எப்படிச் சாதிப்பது என்ற கேள்விகளும் இவருக்குள் வந்தது உண்டு.. எனக்கும் சினிமா ஆசை உண்டு என்று சொல்லும் எத்தனையோ தமிழர்களுக்கு, மேற்கண்ட வரிகள் பொருந்தும். ஆனால், எந்த விசை, சமுத்திரக்கனியை நமக்கு அறிமுகம் செய்தது?

சீரியல்ல வேலை பார்க்குறியா? மெகா தொடர் இயக்குனர் சுந்தர் கே. விஜயனின் இந்த கேள்விக்கு, சமுத்திரக்கனி சரி என்று தலையசைத்ததுதான் அவரது வாழ்வை மாற்றிய முதல் விசை.
சென்னைக்கு வந்தவுடன் ரஜினிக்கும் கமலுக்கும் கதை சொல்லவேண்டும் என்று கோடம்பாக்கத்து வீதிகளில் கால் ரேகை அழியும் அளவுக்கு நடந்தவாறே கனவு காண்பவர்களுக்கு, இந்த கேள்வி தீண்டத்தகாதது.
கனி சீரியல் வேற, சினிமா வேற.. அங்க போய் கஷ்டப்பட்டாலும் எந்த பிரயோஜனமும் கிடையது. இங்க முதல்ல இருந்து தான் ஆரம்பிக்கணும்”. கோடம்பாக்கத்து வித்வான்களின் கேள்விகளுக்கு சமுத்திரக்கனி என்ன பதில் சொல்லியிருப்பார் என்பது நமக்கு நிச்சயம் தேவை இல்லை

சினிமா உலகத்தில் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பது அந்த கணத்தில் அவருக்கு பிடிபட்டிருக்கும். அதற்கு பின், சீரியல் உலகத்தின் அத்தனை அம்சங்களையும் அவர் கற்று தெளிந்திருப்பார். அந்த காரணமே, அவரை இயக்குனர் சிகரம் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனர் ஆக்கியது. (இயக்குனர் செல்வராகவானும் பாலச்சந்தரின் சீரியல்களில் உதவியாளராகப் பணிபுரிந்தவர்)
தொடர்ந்த உழைப்பு, சுற்றி இருப்பவர்களின் கவனத்தை கவர, அதன்பிறகு டிவி உலகத்தில் தனக்கான வெற்றிகளை, பதிவு செய்யத் தொடங்கினார் கனி.


சினிமாவுக்காக வாழ்வை சமரசம் செய்து கொள்பவர்கள் மத்தியில், வாழ்வின் இயல்பான அத்தனை மாற்றங்களையும் எதிர்கொண்டது, கனிக்கு வேறொரு தளத்தை அறிமுகம் செய்திருக்க வேண்டும். திருமணம், வசதி வாய்ப்பு, நட்புக்கு உதவி என்று சாதாரண மனிதர்களை தரிசிக்கும் வாய்ப்பு. சீரியல் இயக்கத்தின் நடுவே, சினிமா உலகத்திற்கும் படையெடுத்துக் கொண்டிருந்தார் கனி.


இடையே, நம்மால் நீர்த்துப்போகாமல் கதை சொல்ல முடியுமா? என்ற சந்தேகம் அவருக்குள் முளைத்திருக்கலாம்.
ஆனால்  மனித உணர்வுகளும் அனுபவங்களும் எந்த திரையிலும் வெளிப்படலாம். சின்னத்திரை, பெரியதிரை என்று பிரித்துச் சொல்வது எதிர்கால வளர்ச்சியை கணித்துப் பார்க்கத் தெரியாதவர்களின் சொல். இதனை சமுத்திரக்கனி ஏதோ ஒரு கணத்தில் உணர்ந்திருக்க வேண்டும்
அதன்பின், அந்த கனவு நனவாகும் முதல் பட வாய்ப்பு, உன்னை சரணடைந்தேன்.


ஒரு படம் இயக்குவதற்கான வாய்ப்பை, அதற்கு முன்பான வாழ்க்கையை கண்டிப்பாக யாராலும் சொல்ல முடியாது. வலிகள் தரும் வேதனையை, தன்மானம் உள்ள எவனும் சொல்லிக் கதற மாட்டான். இந்த வரிகளின் துணையுடன் உன்னை சரணடைந்தேன் படத்திற்க்கு கிடைத்த வரவேற்பை பார்க்கலாம்.
காதலினால் நட்பு சிதைவதை, இயல்பாகச் சொன்ன படம் அது. இன்று ஜாலியான படங்களை இயக்குபவர் என்று அடையாளம் காட்டப்படும் வெங்கட்பிரபுவும்  அவருக்கு சென்னை 28 வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் எஸ்பி சரனும் நாயகர்களாக நடித்தது. விமர்சனங்கள் நன்றாக இருந்தாலும் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

அடுத்து நாடோடிகள் கதையுடன், சிஜே சினிமாஸ் நிறுவனத்துக்கு சென்றபோது, வேறொருவர் எழுதிய கதையை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் நெறஞ்ச மனசு. கஜேந்திரா தோல்விக்குப் பின், அரசியலா? சினிமாவா? என்று தடுமாறிய விஜயகாந்த், இந்த படத்தில் மீண்டும் நாக்கை மடித்து சவால் விட்டார். தன் இனத்தை காக்கப் பாடுபட்டார். கான்வென்ட் டில் படித்த அனுபவத்தோடு வந்த சூசனுடன் டூயட் பாடினார். அவ்ளோதான்! படத்தின் ரிசல்ட் தெரிந்து விட்டது.
சினிமா வேலை என்னவென்று தெரியாத அம்மா, தன்னை நம்பி மனைவியான அக்காவின் மகள், குடும்பதை நடத்த சென்னை வாழ்க்கை தரும் சிரமங்கள்.  

இந்த இடம், சமுத்திரகனியை மீண்டும் விட்ட இடத்தில் தொடரச் செய்தது. பருத்திவீரன், பொய் படங்களில் இணை இயக்குனர் அவதாரம். இயக்குனராக அவதரித்தபின்பு, மீண்டும் வேறொருவருக்கு உதவியாளராகச் செல்வது, சகிப்புதன்மை அளவுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.
சமுத்திரகனி அந்த சிரமங்களை, சிரித்தவாறு எதிர்கொண்டிருக்க முடியாதுதான். ஆனால், அதனை கஷ்டம் என்று நினைக்காத மனம் அவருக்குள் இருந்தது. அதனுள் இனி எந்த வாய்ப்பு கிடைத்தாலும், நிதானாமாக முன்னேற வேண்டும் என்கிற வெறி, ஜோதியாக எரிந்து கொண்டிருந்தது.அதனால் தான், அரசி என்ற மெகா தொடரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது சரி என்று சொன்னார். ஏற்கனவே,  அண்ணி, ரமணி vs ரமணி தொடர்களை இயக்கிய அனுபவம் இருந்தாலும், சினிமாவுக்கு பின் சீரியலா என்ற தயக்கம் அவரிடம் இல்லை. இடையே, தங்கவேட்டை என்ற நிகழ்ச்சியை இயக்கினார்.
'எப்படி பால் போட்டாலும் அடிக்கிறானே' என்று, சமுத்திரக்கனியின் முடிவுகளைக் கண்டு, வாழ்க்கை வடிவேலு வாய்ஸில் முனகியிருக்கும்.


பாக்கியராஜ், டிஆர் மாதிரி ஆகவேண்டும் என்பது நெடுநாள் கனவு. இயங்கிக் கொண்டிருப்பது தான், இந்த உலகத்தின் ஜீவிக்கும் வழிமுறை என்று கனியை சீரியல் உலகத்தில் தொடர வைத்தது அந்த கனவு தான் . இயக்கத்தின் ஊடே நடிப்பும் வெளிப்பட வேண்டும். அந்த ஆசை நிறைவேறும் நாள், சசிக்குமாரின் அழைப்பின் மூலமாக ஆரம்பமானது


வாழ்க்கை முன்வைக்கும் எல்லா சிரமங்களையும், எதிர்கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு கணத்தில் அடுத்த கட்டத்திற்கான கதவுகள் திறக்கும். சுப்பிரமணியபுரம் படத்தில் அவர் நடித்த கனகு பாத்திரம், ரசிகனைச் சென்றடைந்த அந்த ஒரு நிமிடம் போதும்.
மீண்டும் இயக்குனர் நாற்காலி, சமுத்திரகனியின் கைகளுக்கு வந்தது. இந்த முறை, தன்னுடைய பார்வையை, ரசிககனின் கண்களுக்கு முன்னே கச்சிதமாக பொருத்தும் திறமை அவருக்குள் வேர்விட்டிருந்தது. அதன்பிறகு, நாடோடிகள், போராளி என்று சசிகுமார் திரையில் தோன்ற விசில் சத்தம் காதைப் பிளந்தது.
இயக்குனராக இருந்தாலும், மற்றவர்களின் படங்களில் எந்த தலையீடும் இல்லாமல் நடிக்கும் பக்குவம் சமுத்திரகனியிடம் இருந்ததுமலையாள திரையுலகமும் சமுத்திரகனிக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தரத் தொடங்கியது.

இன்று சாட்டை, ஈசன் படங்கள் மூலமாக கடைக்கோடி ரசிகனுக்கும் அறிமுகம் ஆகியிருக்கிறார் கனி. அவரது எண்ணங்களை போலவே, நிமிர்ந்துநில் படத்தின் மூலமாக அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறார் சமுத்திரக்கனி. அதில் தடைகள் இருந்தாலும், தகர்க்கும் திறமை கனிக்கு உண்டு. அதில் வெற்றி பெரும் திறமும் உண்டு.
அதெல்லாம் கிடையாது. முடியாது. இதெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் தான் என்பவர்களுக்கு, சமுத்திரக்கனி போன்றவர்களின் வாழ்க்கை அனுபவம் சொல்வது இதுதான்.
தன்னம்பிக்கை கதைகளை அவநம்பிக்கையுடன் கேட்பவர்களுக்கு, இந்த களத்தில் வெற்றி பெரும் ரகசியம் கடைசி வரை தெரியாது.

குறிப்பு : வெற்றி வெறும் கனியல்ல என்ற பெயரில் இது நடப்பு.காமில் வெளிவருகிறது.

நன்றி – நடப்பு.காம்
-உதய் பாடகலிங்கம்
uthay.padagalingam@gmail.comNo comments: