Feb 27, 2014

ரெண்டாவது இன்னிங்ஸ் - 1


 பகத் பாசில்


சினிமாவுல மட்டும் எப்பவுமே ரெண்டாவது சான்ஸ் கிடையாதுடா.. சும்மா முட்டித் தூக்கிரணும்.. இல்லைன்னு வச்சுக்க.. அவ்ளவுதான்..

இந்த வார்த்தைகளை சினிமாவுலகத்தில் கேட்காமல் வாழ முடியாது. ஏனென்றால், இங்கு முதல் வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள்தான் அதிகம்.. இரண்டாவது வாய்ப்பு என்பது அவர்களைப் பொறுத்தவரை கெட்ட வார்த்தை. அதை எதிர்நோக்காமல் இருப்பதே நல்லது என்பது அந்த உலகத்தின் நம்பிக்கைகளுள் ஒன்று.

ஆனால், இரண்டாவது வாய்ப்பு கிடைக்காதா? என்று ஏங்குபவர்கள் எத்தனை பேர்? எந்தத் துறையில் இருப்பவராக இருந்தாலும், தோல்விக்குப் பின் வெற்றியை அடைந்துவிடத் துடிப்பவர்கள் எத்தனை பேர்?அப்படியொரு வாய்ப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? இந்தக் கேள்விகளைக் கடந்துவந்த மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொண்டால் போதும். நமது முதல் வாய்ப்பும் பிரகாசமானதாக அமையும்..

அந்த வகையில், சினிமாவில் தனக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய நட்சத்திரங்களின் சாதனைகளைப் பார்க்கப்போகிறோம்..

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.. பேச்சு மேடையில் சொல்வது போலத் தோன்றினாலும், இதுதான் உண்மை. பத்துவருடங்களில் எத்தனையோ திரைப்படங்களில் தலைகாட்டினாலும், அவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்ட காரணங்களைப் பற்றி மட்டும் நாம் பேசப்போகிறோம்.. இப்போது தனக்கான தனி அடையாளத்தைப் பெறத் துடிக்கும் சூர்யா, விக்ரம் முதல் ஹிந்தித் திரையுலகில் தனக்கான இடத்தைப் பெற்றிக்கும் சையீப் அலிகான், அபிஷேக் பச்சன் வரை இந்தப் பட்டியல் மிகப்பெரியது. அந்த வரிசையில் நாம் பேசப்போவது பகத் பாசிலின் சினிமாவுலக அடையாளம் பற்றியது.
பகத் பாசில். இவரது பெயரே பின்னணியைச் சொல்லும். பூவே பூச்சூடவா தொடங்கி காதலுக்கு மரியாதை வரை நம் கவனத்தை ஈர்த்த கவிதைத் திரைமொழி சொன்ன பாசிலின் வாரிசு. அதனால்தானோ என்னவோ, இவரது அறிமுகமே அஸ்தமனத்திற்கு காரணம் ஆனது.

இப்பவும் கேரளாவுல டைரக்டருக்குதான் மரியாதை. கமர்ஷியல் படம் ஹிட் ஆனாலும், டைரக்டர் யார்? ஸ்கிரிப்ட் ரைட்டர் யார்ன்னு தான் கேக்குறானுங்க.. இங்கயும் இருக்குறானுங்களே என்று ஒருவர் அலுத்துக்கொள்ள.. இன்னொருவர் சொன்னார் அழுத்தம் திருத்தமாக..

என்ன பெரிசா கேக்குறானுங்க.. பாசில் காதலுக்கு மரியாதை பண்ணவர்தான். அவரால அவர் பையனையே வச்சு ஹிட் தர முடியலையே.. அவன் என்னால நடிக்க முடியாது. போப்பான்னு சொல்லிட்டு பாரின் போயிட்டானாம்.. என்றார்.

அந்த வார்த்தைகளைப் பேசிக்கொள்ளும்போது, நான் அருகில் இருந்தவன் என்கிற முறையில் தெள்ளத்தெளிவாக உணர்ந்த விஷயம் இது. கையத்தும் தூரத்து என்ற படத்தில், தந்தை பாசில் இயக்கத்தில் அறிமுகம் ஆனார் பகத். ஆனால் அதுவே அவரது முதல் வாய்ப்பைப் பறித்தது. மாறிவிட்ட மலையாளத் திரையுலகச் சூழலும், முன்னேற்பாடில்லாத பகத்தின் அணுகுமுறைகளும் அவரை அந்நியனாக்கியது. பகத் பாசிலின் நடிப்பைப் பார்க்காதவர்கள்கூட, அவரது நடிப்பை விமர்சிக்க ஆரம்பித்தனர். சினிமாவில் முதல் வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கான சாபம் அது.

அதனைக் கடந்துவர, பகத்துக்கு எட்டு ஆண்டுகள் ஆனது. கேரளா கஃபே. கடந்த பத்தாண்டுகளில் மாறிவந்த மலையாள சினிமாவின் போக்கை சிறிதே தடம்புரட்டிய படம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, புதியவர்கள் மலையாள சினிமாவில் கோலோச்சுவதற்கான வழிவகை செய்த படம் அது.

பத்து சிறுகதைகள் கொண்ட அந்தப் படத்தில், உதய் ஆனந்தன் இயக்கத்தில் நடித்தார் பகத். அவரை அறிமுகப்படுத்திய பாசிலுக்கு, அந்தப் படத்தில் நியாயம் செய்தார். விமர்சகர்கள், பத்திரிகைகள் தொடங்கி, சாதாரண ரசிகர்களும் பகத்தை அடையாளம் கண்டு கொண்டன். தொடர்ச்சியாக, பிராமணி, டேர்ணமெண்ட், காக்டெய்ல் என்று தனிப்பாதையில் செல்ல ஆரம்பித்தார் பகத்.


வழக்கமான தன்னம்பிக்கை கட்டுரைகளில் சொல்வதுபோல, இது எளிதான காரியம் அல்லதோல்வி, அதற்குப்பின் சிறு வெற்றி.. அதன்பின், பெரிய வெற்றியை எதிர்பார்த்தே பயணம் செய்வது. வார்த்தைகளில் எளிதாக இருந்தாலும், அதனை அனுபவிப்பது பெரும்சாபம்.

என் தந்தையைக் குறை சொல்லாதீர்கள். சினிமாவுக்கான தயார்படுத்துதல் இல்லாமல் வந்தது என்னுடைய தவறுதான் என்று தன்னுடைய தவறை ரசிகர்களிடம் ஒப்புக்கொண்டார். அடுத்தடுத்த படங்களில், தனக்கான பாணியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

குஞ்சாக்கோ போபன், பிருத்விராஜ், சுகுமாரன் தொடங்கி அனுப்குமார், ஆசிஃப்அலி, பாலா என அடுத்த தலைமுறை நடிகர்கள் போராடிய நேரம் அது. பெருந்தலைகளின் சரிவில் ஆரம்பமானது புதியவர்களுக்கான பாதை. ஆனால், ஏற்கனவே சென்ற பாதையில் நம்முடைய காலடித்தடம் எப்படித் தனித்துத் தெரியும்?

வித்தியாசமான கதைக்களன்கள், கதாபாத்திரங்கள், கதைசொல்லல் மூலமாக, தனக்கான அடையாளத்தை உருவாக்கினார் பகத் பாசில். இயக்குனர்களும், கதாசிரியர்களும் பகத்தின் தேடலுக்கு திசையைத் தந்தனர்.

சமிர் தாஹிர். புதிய தலைமுறையில் தனித்துவம் வாய்ந்த ஒளிப்பதிவாளராக தன்னை நிரூபித்தவர். அவர் இயக்கிய சப்பாகுரிசு படம் மூலமாக, அந்த வாய்ப்பு பகத்தை தேடி வந்தது. கேரளா கஃபேயில் தன்னை நிரூபித்த பகத் பாசிலுக்கு மற்றுமொரு வாய்ப்பு.. இதற்காகத் தானே காத்திருந்தாய் என்பதுபோல, அற்புதமாக நடித்தார் பகத்.

தன்னைத் தேடிவந்த பெண்ணுடன் உறவுகொண்டு, அதனை செல்போனில் படம்பிடித்து வைத்து ரசிக்கும் இளைய தலைமுறை ஆண்மகனை அப்படியே பிரதிபலித்தார். இணையங்களில் நிரம்பிவழியும் ஆபாசக்குப்பைகள், இப்படியொரு சூழ்நிலையில் வெளிவந்திருக்கலாம் என்பதை நெற்றிப்பொட்டில் அறைந்து சொன்ன திரைப்படம் அது..

ரெட்ஒன் கேமிராவில் படம்பிடிக்கப்பட்ட சப்பா குரிசு பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், வித்தியாசமான திரைப்படங்களை நோக்கி நகரத் துடிக்கும் இளையதலைமுறையின் நாயகனாக பகத்தை வார்த்தது.

முன்தலை வழுக்கை, மீசையில்லாத முகம், நடுத்தர உயரம், அத்லெடிக் வீரனைப் போன்ற உடல்வாகு. ஆர்ப்பாட்டம் இல்லாத பேச்சு, இவற்றுடன் யதார்த்தமான நடிப்பைக் கலந்து கொடுத்தால், இன்றைய மலையாளி இளைஞனை அப்படியே பிரதிபலித்துவிடுவார் பகத் பாசில்.

சப்பாகுரிசு  மாதிரியான படங்கள், புதுமுக நடிகனுக்கு எளிதாகக் கிடைக்காது. எனக்குக் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்றார் பகத். படத்தில் அவருக்கும் ரம்யா நம்பீசனுக்கும் இடையேயான முத்தக்காட்சி அத்தனை பரபரப்பையும் கொட்டிக் கொண்டது.


இதனைத் தொடர்ந்து வந்த பீமேல் கோட்டயம் திரைப்படம், பழிவாங்கல் படங்களில் புது முத்திரை பதித்தது. பெண்களின் எண்ணங்களை திரைக்கதையாக்கிய இந்தப் படத்திலும், வில்லங்கமான வேடத்தில் நடித்தார் பகத். கம்பிமேல் நடக்கும் வித்தை கைவரப்பெறுவது ஒருவித வரம். பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளும் மேல்தரவர்க்க விபச்சாரத் தரகன் வேடத்தில் வாழ்ந்து காட்டினார் பகத்.

படத்தின் நாயகி ரீமா கல்லிங்கலிடம் பகத் பாசில் பேசும்போது, அவரது தோழி பகத்தின் பின்பக்கத்தைப் பார்த்துச் சொல்லுவார் நைஸ் ஆஸ்.. என்று. இப்படியொரு கமெண்ட் வசனத்தில் இடம்பெறுவது பகத் பாசில் போன்ற இளையதலைமுறை நடிகர்கள் வெற்றி பெற்றபின்புதான் ஆரம்பித்தது.
செக்ஸியான கதாபாத்திரங்களும் அதற்கேற்றாற் போன்ற திரைக்கதையும் பகத்பாசிலுக்கு கச்சிதமாகப் பொருந்தியது. இம்மாதிரியான கதாபாத்திரங்களை ஆண்ரசிகர்கள்தான் ரசிப்பார்கள் என்றநிலை மாறி, பெண் ரசிகர்களும் பகத் பாசிலுக்கு அதிகம் என்பது அவரது நடிப்புக்கு கிடைத்த வெற்றி..

லால்ஜோஸ் இயக்கத்தில் வெளிவந்த டைமண்ட் நெக்லேஸ் திரைப்படம், பகத்தின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறது. இப்போது மலையாள சினிமாவுலகின் அடையாளமாக மாறிவருகிறார் பகத் பாசில்.

இர்பான்கான், அர்ஷத்வர்சி போன்ற அடுத்த தலைமுறை நடிகர்கள் மாற்றுசினிமாவுக்கும் வணிக சினிமாவுக்கான இடைவெளியை நிரப்பும் கலைஞர்களாகத் திகழ்கின்றனர். மலையாளத்திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரும் அப்படியொரு நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றனர். ஆனால், பகத்பாசிலுக்கு அப்படியொரு வாய்ப்பு தானாக அமைந்திருக்கிறது.

படித்து முடித்து, வெளியூரில் தனக்கான அடையாளத்தை உருவாக்கும் கேரள இளைஞர்களின் மொத்த வடிவமாக அடையாளம் காணப்படுகிறார் பகத் பாசில். முதல் பட தோல்விக்குப்பின், அமெரிக்காவில் போய் படித்துவிட்டு வந்தவருக்கு, சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்திருக்கலாம். ஆனால், நடிப்பில் தனக்கான இடம் வேண்டும் என்று தீர்மானித்து வெற்றி பெற்றிருப்பது யாரும் எதிர்பாராதது. திரையுலகில் பாசிலுக்குக் கிடைத்த கெட்டபெயரை மாற்ற வேண்டும் என்று பகத் யோசித்ததும் அதற்கான காரணங்களில் ஒன்று.

இரண்டாவது வாய்ப்பு கிடைக்காதா? என்று ஏங்கும் திரையுலகினரின் மத்தியில், திட்டமிட்டு தனக்கான வாய்ப்பை, இடத்தை உருவாக்கியவர் பகத் பாசில்.


இப்போது பகத் பாசிலின் படத்தைப் பார்க்கும் திரையுலகினர் இப்படியும் சொல்வார்கள். பர்ஸ்ட் இன்னிங்ஸ்ல டக்அவுட் ஆனவன், செகண்ட் இன்னிங்க்ஸ்ல நாட்அவுட் செஞ்சுரி அடிப்பான்ல, அந்த மாதிரிதான்டா பகத் பாசில்.. விட்டதைப் பிடிச்சிட்டான். இப்படியும் சொல்வார்களோ.. இருக்கலாம்.. இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுபவர்களைப் பற்றி, இறுதிவரை இப்படித்தான் பெருமை பேசுவார்கள்.. இது எப்படியிருக்கு??

நன்றி – நடப்பு.காம்
-உதய் பாடகலிங்கம்

uthay.padagalingam@gmail.com

No comments: