May 15, 2012

குழந்தைத் தொழிலாளர்களும் குட்டீஸ் ஸ்பெஷல் டிவி நிகழ்ச்சிகளும்..


குழந்தைகள் தொழிலாளர்களாக, ஒரு பணியில் நீடித்திருந்திருந்தால், அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக கருதப்படுவார்கள்.. குழந்தைத் தொழிலாளர் பற்றி விக்கியில் கொடுத்திருக்கும் விளக்கம் இது..

சரி.. உண்மையில் குழந்தைத் தொழிலாளர்கள் என்பவர்கள் யார்?? செங்கல் சூளைகளிலும், முறுக்கு கம்பெனிகளிலும் 20 மணி நேரத்திற்கும் மேலாக வேலை பார்ப்பவர்கள்தான் குழந்தைத் தொழிலாளர்களா??






நாம் பார்த்து ரசிக்கும், ஆரவாரிக்கும் குழந்தைகள் இந்த வகையில் சேரமாட்டார்களா?? என்ன புரியவில்லையா?? மழலைக்குரலில் வாடி வாடி என் க்யூட் பொண்டாட்டி என்று பாடும் குழந்தைகளும்,  வொய் திஸ் கொலவெறி என்று அரைகுரை ஆடைகளுடன் பருவ வாசலில் எட்டிப் பார்ப்பவர்களும் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லையா? அவர்களுடைய பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக காசு வாங்குவதில்லையா??

எனக்குத் தெரிந்த ஒரு பையன்.. இல்லை, அவனைக் குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது அவனுக்கு 7 வயதிருக்கும். வேட்டைக்காரன் விஜய் போல ஆடையணிந்துகொண்டு, அவன் பாட ஆரம்பித்தால்.. அரங்கில் இருப்பவர்கள் மட்டுமில்ல, டிவியில் பார்க்கும் தாய்மார்களும் கைதட்டுவார்கள்.

அவனது பெற்றோர்களுக்கு மிகுந்த சந்தோஷம். இருக்காதா பின்னே, மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கிறான். அடுத்த மாசம் துபாய் ப்ரோக்ராமுக்கு ஒன்னு பத்து(1.10லட்சம்) வாங்கப்போறான் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் அங்கலாய்ப்பார் அவனது அப்பா. அடுத்த பையன் இப்பவே டான்ஸ் ஆடுறான் என்பார் அம்மா. இது ஒரு குடும்பத்தின் நிலை. அந்தக் குழந்தையை நீங்கள் குழந்தைத் தொழிலாளர் என்று சொல்வீர்களா? மாட்டீர்களா?? பள்ளிக்குச் செல்லாமல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு போவதும், அதற்காக பணம் வாங்குவதும் தொழில் இல்லையா? கலைச்சேவை ஆகிவிடுமா??



இப்போது தெருவுக்குத் தெரு ஒவ்வொரு கேபிள் டிவிக்களும் இதுபோன்ற சிங்கர், டான்ஸர் நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்து விட்டார்கள். இதனால் குழந்தைகளின் திறமை வெளியுலகிற்குத் தெரியுமே? அதை ஏன் பார்க்க மாட்டேங்கிறீங்க? என்றுகூட, குரல்கள் எழலாம்..

பணம் வாங்கிக்கொண்டு, குழந்தைகள் ஒரு வேலையில் ஈடுபட்டால், அவர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் வகையில் தான் சேர்வார்கள். அதில் ஈடுபடும் டிவி நிர்வாகமும், அவர்களின் திறமையை வளர்க்கிறேன் பேர்வழி என்று காசை வாங்கி எண்ணும் பெற்றோர்களும் குற்றவாளிகள்தான்..

ஏன்? இந்த வாரம் அனுஷா பொண்ணு சூப்பரா பாடுனா தெரியுமோ? என்று குழந்தைகளின் திறமையை டிவி வழி வளர்க்க நினைக்கும் நாமும் குற்றவாளிகள்தான்..

தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டால், நாம் தீப்பெட்டிகளை வாங்க யோசிக்கிறோம்.. (சில பேர் யோசிக்கிறாங்கப்பா.. நானும் அதுல ஒருத்தன்..) ஆனா, இதுபோன்ற டிவிநிகழ்ச்சிகளை நாம புறக்கணிக்கிறோமா?? (மில்லியன் டாலர் கொஸ்டின்??)




குழந்தைத் தொழிலாளர்கள் வளர்ந்த பின்னும், வாழ்க்கை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பார்கள். இவர்கள் வளர்ந்தபிறகு, பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறுவார்கள். எதில் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியே??

நிகழ்ச்சிகளில் குழந்தைகள் அழுவதைப் பார்த்து பெற்றோர் கண்ணீர்விடுவதும், அதனைப் பார்க்கும் நாம் உருகுவதும் எப்படிப்பட்ட முட்டாள்தனம்?? குழந்தைகளைச் சம்பாதிக்க வற்புறுத்தும் அவர்களும் நாமும் ஒன்றா?? (இதைக்கூட யோசிக்கலேன்னா..)

கட்டிடம் கட்டுவதுபோல, குழந்தைகள் வளர வேண்டும். சம்பாதிக்க வேண்டும். வசதிவாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், அப்படியே அப்பீட் ஆகிக்கொள்ளலாம். குழந்தைகள் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள், மேற்படி யோசனைகளை மனதில் அசைபோடலாம்..

ஆனா, தயவுசெய்து இது சரியா? தவறா?ன்னு விவாதம் பண்ண.. திரும்பவும் டிவி பொட்டியை ஆன் பண்ணிராதீங்க??

No comments: