May 11, 2012

50 பைசான்னா சும்மாவா??
தலைப்பை பார்த்துவிட்டு, இதெல்லாம் ஒரு விஷயமா? என்று யோசிக்கலாம். 50 பைசாங்கறது, பெரிய விஷயம் இல்லங்கறதுதான், நாம எப்பவுமே யோசிக்கறது. இதையே மாத்தி யோசிச்சுப் பாருங்க.. பல லட்சம் கோடி 50 பைசா சேர்ந்தா, அதை நாம சாதாரண விஷயமாக பார்ப்போமா??

ஆங்! அதுதான் விஷயம்.. உதாரணமா, ஒரு பெட்டிக்கடையில வாட்டர் பாக்கெட் வாங்குறோம்.. ரெண்டு ரூபா கொடுத்தா, 1.50 போக.. நம்ம கையில ஒரு சாக்லேட் கொடுப்பாரு.. ஐய்யோ, பெப்பர்மின்ட் எல்லாம் நான் சாப்பிடறது இல்லன்னு சொன்னாலும், அதை காதுல போட்டுக்க மாட்டார்.. கொஞ்சம் அழுத்தமா கேட்டா, 50 பைசா இல்லிங்கன்னு சொல்லுவார்..

சரி.. போனா போகுதுன்னு, நாம 50 பைசா கொடுத்தா.. ரிச்சர்ட் பிரான்ஸன் பிளைட் நம்ம வீட்டு முன்னாடிதான் நிக்குது.. அதை வேற டேக்ஆஃப் பண்ணச் சொல்லணும்கற மாதிரி யோசனை பண்ணிட்டு இருப்பார்.. நாம அதையும் கேட்டா.. என்கிட்ட இருந்து 1 ரூபா வாங்கிட்ட.. என்று ஒரு பார்வை பார்ப்பாரு.. அப்போ நீங்க, அதை அவமானம்னு நினைக்கலேன்னா, நீங்க தமிழ்நாட்டுல இல்ல.. உலகத்துல எந்த மூலைலயும் பொழப்பு நடத்தி, பல பேர்கிட்ட இருந்து பொக்கே வாங்கலாம்..

சரி.. பெட்டிக்கடை மட்டுமா, பஸ்ல கண்டக்டர் சில்லறை தர்றதில்ல.. பாட்டா கடையில 399.50 காசுன்னு பில்போட்டுட்டு, பாக்கி தர்றதில்ல.. தியேட்டர்ல தர்றதில்லன்னு ஒரு லிஸ்ட் வாசிக்கலாம்..

சரி.. இப்போ பஸ்ல கண்டக்டர் நமக்கு 50 பைசா பாக்கி தரலைன்னு வச்சுக்குவோம்.. காலையில எட்டரை மணிக்கு பஸ்ல கூட்டம் தன்னால அம்மும். அப்போ, நம்மளை மாதிரியே, ஒரு இருபது பேர் 50 பைசா இல்லன்னு சொல்லுவாங்க.. (அப்பவே அவர் பத்து ரூபா ஆட்டைய போட்டுடறாரு!!)

இதே மாதிரி, நாலு பீக்அவர் ட்ரிப் அடிச்சா போதும்.. 40 ரூபா ஆயிடும்.. இது சும்மா வுட்டாலக்கடி கணக்குதான்.. சில கண்டக்டர்கள் இதை வச்சே, சரக்கு வாங்கிடுவாங்க. அது தனிக்கதை.

ஓகேஓகேல சொல்ற மாதிரி, இப்படி ரமேஷ், சுரேஷ், ராமு, சோமுன்னு ஒவ்வொரு கண்டக்டரும் ஒவ்வொரு பயணிகிட்டயும் 50 பைசா ஆட்டைய போட்டா.. இந்தியா எப்ப பொருளாதாரத்துல முன்னேறும்.. வரி இல்லாத இந்த வருமானம்தான், நமக்கு எந்த விதத்துல உதவும்?? (சரி.. டாபிக் மாறுது.. திரும்பவும் வந்துரலாம்)

இப்போ சிட்டி பஸ்ல 50 பைசா அதிகமா வாங்கறதில்ல.. ஏன்னா, டிக்கெட் எல்லாமே ரெண்டு ரூபா, ஒரு ரூபான்னு மிச்சம் தர்ற மாதிரிதான் இருக்கு.. அதனால, அவங்க எல்லோரும் இப்போ ஒரு ரூபாய்க்கு மாறி.. ரொம்ப நாளாச்சு..

நாம 50 பைசா மேட்டருக்கு வருவோம்.. பெட்டிக்கடையில சிகரெட், வாட்டர் பாக்கெட், பாக்கு எதை வாங்கினாலும், அவங்க 50 பைசாக்கு பதிலா சாக்லேட்தான் தருவாங்க.. அந்த சாக்லேட்டை எல்லாம் மொத்தமா சேர்த்துக் கொடுத்தா, ரூபா கொடுப்பாங்களா?? (சில்லறைக்கு பதிலாதானே கொடுக்கறீங்க.. அப்போ அதுக்கும் மதிப்பு இருக்கணும்ல)

நாமளே முடிவு பண்ணி, 50 பைசா கொடுங்கன்னு கேட்டு வாங்குறவரைக்கும், இந்தக் கொள்ளை நடந்துட்டுதான் இருக்கும்.. (50 பைசால்லாம் ஒரு மேட்டரான்னு இப்பவும் கேட்காதீங்க?? ஒரு நகரத்துல நடக்குறதுக்கே, மனசு இந்த கொதி கொதிக்குதுன்னா.. உலகம் வேண்டாம், இந்தியாவும் வேண்டாம்.. நம்ம தமிழ்நாடு முழுக்க நடக்கறதை நினைச்சா, என்னாகும்??)

ரிசர்வ் வங்கி 50 பைசா செல்லும் ஜூன் 2011ல சொல்லிட்டாங்க.. ஆனா, 25 பைசா அவுட் ஆயிடுச்சு.. அதே மாதிரி, 50 பைசா அவுட் ஆகுற வரைக்கும், இந்த கொள்ளை தொடரும்..

வடஇந்தியக் கொள்ளையர்கள், முகமூடிக் கொள்ளையர்கள்னு திருடன்கள்லயும் சாதிவித்தியாசம் காட்டுற நம்மோட அரசும் இதைக் கண்டுக்காமதான் இருக்கும்..

இப்ப சொல்லுங்க.. 50 பைசான்னா சும்மா இல்லேல்ல..

No comments: